செல்போனை சேஃப்டியாக வைத்திருக்கும் வழிமுறைகள்
‘செல்போன் சார்ஜில் இருக்கும்போது பேசியதால் போன் வெடித்து இளைஞர் பலி’, ‘இரவு முழுக்க சார்ஜில் இருந்த போன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் பலி’ என டெக்னாலஜி தொடர்பான கவனக்குறைவு மற்றும் தவறு ஏற்படுத்தும் விபத்துகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. மொபைல்… `டூஸ் அண்ட் டோன்ட்ஸ்’ இங்கே!
முதலில் போனோடு கொடுக்கப்படும் யூசர் கைடை முழுமையாகப் படித்து… அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எப்படிக் கையாளக் கூடாது போன்ற விவரங்களை அறிந்துகொள்ளுங்கள்.
போனுக்கு உரிய ஒரிஜினல் சார்ஜரை மட்டுமே பயன்படுத்துங்கள். நண்பர்களின் சார்ஜரை ஓசி வாங்கும்போது, ஒரு நிறுவனத்தின் மொபைல் செட்டுக்கு மற்றொரு நிறுவனத்தின் சார்ஜரைப் பயன்படுத்தி செட்டை டேமேஜ் ஆக்காதீர்கள். ஒருவேளை நீங்கள் சாம்சங் போன் வைத்திருந்தால், குறைந்தபட்சம் சாம்சங் போன் வைத்திருக்கும் நண்பரின் சார்ஜரையாவது பயன்படுத்துங்கள்.
ஆன்லைன் ஆஃபரை நம்பி சார்ஜரை ஆர்டர் செய்து மலிவு விலையில் வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். அந்த தரமில்லாத சார்ஜர், உங்கள் செல்போனின் பேட்டரியை பழுதாக்கிவிடும். மேலும், இது பாதுகாப்பானதும் அல்ல. செல்ஃபோன் வெடித்த சில நிகழ்வுகளில், மலிவு விலை சார்ஜரைப் பயன்படுத்தியதும் ஒரு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேட்டரி விஷயத்திலும் டூப்ளிகேட் தவிர்த்து ஒரிஜினலையே பயன்படுத்துங்கள்.
சார்ஜர் பின்னும் பிளக் பாயின்ட்டும் ஒரே அளவில், கச்சிதமாகப் பொருந்தினால் மட்டுமே அந்த பிளக் பாயின்டில் சார்ஜ் செய்யுங்கள்.
ஸ்மார்ட்போனை சில நாட்களுக்கு ஒருமுறை சிறிது நேரமாவது சுவிட்ச் ஆஃப் செய்துவையுங்கள். பேட்டரிக்கும் ஓய்வு தேவை. இது எல்லோருக்கும் தெரிந்த, ஆனால்… செயல்படுத்த மறுக்கும் ஒரு விஷயம்.
செல்போன் சார்ஜில் இருக்கும்போதே பேசுவது, `வாட்ஸ்அப்’ செக் செய்வது, படம் பார்ப்பது, கேம் விளையாடுவது, ஹெட் செட்டில் பாட்டுக் கேட்பது… இவையெல்லாம் போனை விரைவில் சூடாக்கும். விளைவாக விபத்து ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்தாக முடியலாம்… உஷார்!
போன் சார்ஜில் இருக்கும்போது அதை தலையணைக்குக் கீழே வைக்காதீர்கள். காற்றோட்ட மில்லாத அந்த இடம், போனை அதிக சூடேற்றும்.
இரவு முழுக்க போனை சார்ஜில் வைத்திருப்பது, மிகப் பெரிய தவறு. அது போனை சூடேற்றும், விபத்துக்கு வழிவகுக்கும். 100% சார்ஜ் ஆனவுடன் உடனடியாக சார்ஜிங்கை நிறுத்திவிட வேண்டும்.
போனை சார்ஜ் செய்துகொண்டே இருக்காதீர்கள். பொதுவாக, போனை முழுதாக சார்ஜ் செய்து, பின்னர் சார்ஜ் தீர்ந்ததும் மீண்டும் சார்ஜ் செய்தால் பேட்டரி நீண்ட நாள் நீடிக்கும். இதை ‘சார்ஜ் டிஸ்சார்ஜ்’ ஃபார்முலா என்பார்கள்.