ஓபன் டே நிகழ்ச்சியை எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்?

open day

 ஒரு வெளிநாட்டுக் கல்வி நிறுவனத்தில் சேரும் முன்னதாகவே, அங்கே நேரடியாக செல்வதென்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அம்சம். உங்களின் எதிர்பார்ப்பு மற்றும் நீங்கள் கேள்விப்பட்டதற்கேற்ப அக்கல்வி நிறுவனம் இருக்கிறதா? என்பதை நீங்கள் அதன்மூலமாக அறிந்துகொள்ள முடியும்.

ஏறக்குறை அனைத்து வெளிநாட்டுப் பல்கலை மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுமே, தங்களிடம் சேரவுள்ள மாணவர்கள், தேவையான விபரங்களை அறிந்துகொள்ளும் வகையில், Open Day என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றன. இதில், கலந்துகொள்ளுமாறு மாணவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

ஓபன் டே நிகழ்வு

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தால் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, மேற்பார்வை செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட கல்வி நிறுவன வளாகத்திற்குள் சென்று, வகுப்பறைகள், நூலகங்கள், தங்குமிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறான இடங்களை நீங்கள் காணலாம். அதாவது, நீங்கள் வளாகத்திற்கு எங்கெங்கே செல்ல வேண்டும் என்று கல்வி நிறுவனம் திட்டமிடுகிறது.

சில கல்வி நிறுவனங்கள், பாடவேளை நேரங்களில் வகுப்பறைகளில் அமரச்செய்வதோடு, ஆசிரியர்களுடனும் பேச வைக்கின்றன.

இதன் நோக்கம்

கல்வி நிறுவனமே ஏற்பாடு செய்து, இன்னின்ன இடத்தைத்தான் ஒரு மாணவர் பார்க்க வேண்டுமென முடிவுசெய்யப்பட்டு நடத்தப்படும் ஓபன் டே நிகழ்ச்சியின் மூலம், அந்தக் கல்வி நிறுவனத்தின் மைனஸ் பக்கங்கள் மறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனவே, அந்த நிகழ்வில் நீங்கள் பெற்ற அனுவத்தை மட்டுமே வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்தமாக முடிவுசெய்துவிட முடியாது. அதைத்தாண்டிய வேறு விஷயங்களையும் நீங்கள் ஆராய வேண்டும்.

வகுப்பறைகள்

ஓபன் டே நிகழ்ச்சியில், ஹைடெக் லெக்சர் வளாகம் மற்றும் வகுப்பறைகளுக்கு நீங்கள் அழைத்து செல்லப்பட்டு, அங்கே லெக்சரில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்படலாம். எனவே, நீங்கள் வேறு சாதாரண வகுப்பறைகள் மற்றும் நீங்கள் சேரவிருக்கும் துறை தொடர்பான வகுப்பறைகளுக்கும் அழைத்து சென்று காட்டுமாறு கூற வேண்டும்.

மேலும், வளாகத்தை நன்றாக சுற்றி, அங்கிருக்கும் பிற வகுப்பறைகளையும் நீங்கள் பார்க்க வேண்டும். அப்போதுதான், உண்மை நிலையை நன்றாக அறிந்துகொள்ள முடியும்.

தங்குமிடம்

வெளிநாட்டில் படிக்கும் பல மாணவர்கள், விடுதியிலேயே தங்குவார்கள். ஓபன் டே நிகழ்வில், விடுதி அறைகள் காட்டப்படும்போது, நல்ல luxury அறைகள் மற்றும் வசதியுள்ள அறைகள் காட்டப்படும். அதுபோன்ற அறைகள் பொதுவாக, இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், முதுநிலை மாணவர்கள் அல்லது பிஎச்.டி. ஆய்வு மேற்கொள்பவர்களுக்கானதாய் இருக்கும்.

ஆனால், புதிதாக சேரும் மாணவர்களுக்கு, பொதுவாக, சுமாரான வசதிகளுடைய அறைகளே ஒதுக்கப்பட்டிருக்கும். எனவே, உங்களுக்கு சுற்றிக்காட்ட வரும் நபரிடம்(கைடு), fresher மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அறைகளை காட்டுமாறு கூற வேண்டும்.

நூலகம்

பொதுவாக, நூலகங்கள் பெரிதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்களிலும் பரவியிருக்கும். எனவே, நீங்கள் நூலகத்திற்கு அழைத்துச்சென்று காட்டப்படும்போது, அதிக வசதியுள்ள மற்றும் பல்வேறான சிறந்த புத்தகங்கள் நிறைந்த தளத்திற்கு மட்டுமே அழைத்துச் செல்லப்படும் வாய்ப்புண்டு.

எனவே, வேறு தளங்களுக்கும் நீங்கள் சென்று பார்க்க வேண்டும். அங்கே, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் எப்படி இருக்கின்றன என்பதை பார்ப்பதோடு, பிறவகையான வசதிகளையும் ஆய்வுசெய்ய வேண்டும்.

மாணவர் யூனியன்

நீங்கள் சேரவிரும்பும் கல்வி நிறுவனத்தில், மாணவர் யூனியன்கள் எவ்வாறு இயங்குகிறது என்பதை தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானது. பப்கள், ரெஸ்டாரன்ட்டுகள், கபே மற்றும் கிளப்புகள் போன்ற வசதிகள், அங்கே மாணவர் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதை கூறக்கூடியவை.

நீங்கள், மாணவர் யூனியனுக்குச் சென்று அங்கே நிலைமை எப்படி? என்பதைப் பார்க்கலாம். இதுதவிர, சம்பந்தப்பட்ட பல்கலையின் செய்தித்தாளை பார்ப்பது மிக மிக அவசியமானது. இதன்மூலம், அக்கல்வி நிறுவன நடவடிக்கைகளை அதிகளவில் அறிந்துகொள்ள முடிவதோடு, மாணவர்களின் பிரச்சினைகள் எவை என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

பேராசிரியர் சந்திப்பு

ஓபன் டே நிகழ்வில் இடம்பெறும் பேராசிரியர் சந்திப்பை, முடிந்தளவிற்கு சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் ஏதேனும் ஒரு பேராசிரியருடன் பேசும்போது, ஒரு படிப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது? ஒரு வாரத்தில் எத்தனை லெக்சர்கள் வழங்கப்படுகின்றன மற்றும் ஒரு பாடத்தில் எத்தனை மாணவர்கள் வரை கற்பிக்கப்படுகிறார்கள் என்பன போன்ற விபரங்களை கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.

மேலும், உங்களுக்கான வகுப்பை எந்தெந்த ஆசிரியர்கள் எடுப்பர் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள், முக்கியத்துவம் வாய்ந்த ஆசிரியர்களா? அல்லது பிஎச்.டி. மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஆசிரியர்களா? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

முறையாக பயன்படுத்துங்கள்

ஒரு ஆண்டில், எந்தெந்த நாட்களை ஓபன் டே நிகழ்வுக்கு ஒதுக்குவது என்பதை, வெளிநாட்டுப் பல்கலைகள், ஏற்கனவே முடிவுசெய்து வைத்திருக்கும். எனவே, நீங்கள் என்ன தேதியில் கலந்துகொள்ள இருக்கிறீர்கள் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

நீங்கள் சர்வதேச மாணவர் என்பதால், சில பல்கலைகள், அவர்கள் நிர்ணயித்த தேதிகள் தவிர, உங்களுக்கு தோதான தேதிகளை தேர்வுசெய்துகொள்ள சுதந்திரம் வழங்கும். எனவே, நீங்கள் உங்களுடைய வசதிக்கேற்ற ஒரு தேதியை முடிவுசெய்து, அதுகுறித்து தகவலை, குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாகவே, பல்கலைக்கு தெரிவித்துவிட வேண்டும்.

வெளிநாட்டிற்கு சென்று, ஒரு பல்கலையை சுற்றிப்பார்த்து, அதைப்பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதென்பது, ஒரு செலவுவாய்ந்த நடவடிக்கை. எனவே, உங்களின் பயணத்தை ஒரு சுற்றுலாவாக நினைக்காமல், வெறுமனே ஜாலியான ஒன்றாக எடுத்துக்கொள்ளாமல், தேவையானதை தெரிந்துகொள்ளும் வகையிலும், அக்கறையுடனும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் கவனிக்க வேண்டிய வேறு சில அம்சங்கள்

* ஒரு பல்கலையின் வளாகம் எங்கே அமைந்துள்ளது? அமைதியான புறநகர் பகுதியிலா? அல்லது நெரிசலான நகரின் மையப் பகுதியிலா? எதுபோன்ற சூழல் உங்களுக்கு ஒத்துவரும்?

* ஓபன் டே நிகழ்வு என்பது, பொதுவாக கோடை காலங்களில், மாணவர்கள் ஜாலியாக இருக்கும் காலகட்டத்தில் நடத்தப்படும். எனவே, ஒரு கேம்பஸ் சூழலை அதன்மூலம் மட்டுமே மிகச்சரியாக கணிக்க முடியாது. எனவே, உங்களால் முடிந்தால், வேறுஒரு சீசனில் அப்பல்கலைக்கழகம் சென்று, அங்குள்ள கேம்பஸ் சூழலை ஆராயவும்.

* பல்கலை வளாகத்தில், கேன்டீனிலோ அல்லது மைதானத்திலோ வைத்து, அங்கே படிக்கும் மாணவர்களிடம் உரையாடலாம். அவர்களின் உண்மையான கருத்தை கேட்டறியவும்.

* ஒரு பல்கலைக்கழகம், எந்த மாதிரியான போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ளது மற்றும் அதை சென்றடைவதற்கான சுலபமான வசதிகள் பற்றி ஆராயவும். மேலும், பேருந்து நேரங்களையும் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும். மேலும், பல்கலைக்கு வெகு அருகிலுள்ள நகரம் பற்றியும் தெரிந்துகொள்வது நல்லது.

Leave a Reply