முருகனுக்கு எப்படி அறுபடை வீடுகள் உள்ளனவோ, அது போலவே விநாயகருக்கும் உண்டு. அதில் முதன்மையானது சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் சாலையில் அமைந்திருக்கும் “திருநாரையூர்” மற்றவை திருவண்ணாமலை, திருக்கடவூர், மதுரை, திருமுதுகுன்றம், காசி ஆகியவையாகும். கரையான் அரித்து அழிந்து போக்கக் கிடந்த தேவாரப் பாடல்களை நமக்கு மீட்டுக்கொடுக்க உதவியதே இந்த “திருநாரையூர்” “பொள்ளாப் பிள்ளயார்” தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என தெரியவில்லை.
“பொள்ளாப் பிள்ளையார்” (பொள்ளா+ பிள்ளையார்) அதாவது உளிப்பட்டு பிளக்காமல் சுயம்புவான வடிவமான பிள்ளையார்) என்பது பொருள். இந்த பொள்ளாப் பிள்ளையார்” சந்நிதியில் தினமும் பக்தியுடன் பூசித்து வந்த அனந்தேசர் மற்றும் அவரின் துணைவி கல்யாணி தம்பதியினருக்கு ஒரு புதல்வன், அவரின் பெயர் “நம்பி”. தினமும் மனைவி கொடுத்தனுப்பும் நைவேத்தியம் அனைத்தையும் கோயிலிலேயே கொடுத்து விட்டு திரும்புவார் அனந்தேசர். பிரசாதம் கேட்கும் தன் பிள்ளை நம்பியிடம் பிள்ளையார் சாப்பிட்டுவிட்டார் எனப் பதில் சொல்வார் தந்தை. ஒருமுறை தந்தை வெளியூர் சென்றிருந்த போது சிறுவன் நம்பி பிள்ளையாரை பக்தியுடன் பூசை செய்து விட்டு, தன தாய் கொடுத்தனுப்பிய நைவேத்தியத்தைப் பிள்ளையாருக்கு கொடுத்து அவரை சாப்பிடும்படி வேண்டினான். பிள்ளையார் சாப்பிடவில்லை. பிள்ளையாரிடம் கதறினான்,மன்றாடினான் தான் ஏதோ தவறு செய்துவிட்டதால் தான் பிள்ளயார் உணவை ஏற்க மறுக்கிறார் என்று எண்ணி வேதனையுடன் விழுந்து, தலையைக் கல்லில் முட்டி, மோதி அழுதான்.
விநாயகர் தம் தும்பிக்கையால் நம்பியை தாங்கித் தடுத்து, துதிக்கையை வலப்புறமாக நீட்டிச் சாப்பிட்டார். மகிழ்ச்சியுடன் இல்லம் திரும்பிய நம்பி, விஷயத்தைத் தாயாரிடம் சொன்னான். அவர்கள் நம்பவில்லை. பிள்ளை பொய் சொல்கிறான் என்றெண்ணி, மறுநாள் நம்பியின் தந்தை மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தார், மீண்டும் அதே அற்புதம் நடைபெற்றது. நம்பி கொடுத்த உணவை தும்பிக்கையை நீட்டி விநாயகர் ஏற்று உண்ட காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்தார் அனந்தேசர்.
சிதம்பரத்தில் இருந்த ராஜ ராஜன் காதிற்கு இந்த செய்தி எட்டியது, சைவத் திருமுறைகளை தொகுக்கும் மாபெரும் பணியை இவரை வைத்து முடித்து விட வேண்டும் என்று நம்பியாண்டார் நம்பியை நாடினான் ராஜ ராஜன்.
இராஜராஜன், சிதம்பரம் அந்தணர்களிடம் சென்று தேவாரம் இருக்கும் அறையை திறக்கும்படி அனுமதி கேட்டான். மறுத்தனர், வட மொழியில் தான் இறைவனை வணங்க வேண்டும், இதை எழுதிய “அப்பர்”, “சுந்தரர்”, “திருழானசம்பந்தர்” வந்தால் தான் திறக்க முடியும் என்று தெரிவித்தனர், ஆத்திரம் அடைந்த ராஜ ராஜன், “அப்பர்”, “சுந்தரர்”, “திருழானசம்பந்தர்” ஆகியோரின் சிலைகளை கொண்டு வந்து, இதோ வந்துவிட்டனர் திறந்துவிடுங்கள் என்று கூறினான், அதற்கு அந்த அந்தணர்கள் இவை வெறும் சிலைகள் தானே அவர்கள் உயிரோடு நேராக வந்தால் தான் திறப்போம் என்று கூறியதும், ராஜ ராஜன் கருவறையில்உள்ள சிலையை காட்டி, பிறகு அந்த சிலைக்கு மட்டும் ஏன் பூஜை செய்கிறீர்கள் அதுவும் சிலை தானே என்று வாதிட்டான். அந்த கருவறை சிலையில் கடவுள் இருப்பது உண்மை என்றால், இந்த சிலையிலும் இந்த மூவர் இருப்பது உண்மை என்று கூறி அவர்கள் தடுத்ததையும் மீறி அந்த அறைகளை திறந்தான்.
திறந்தவுடன் ஓலைச் சுவடிகள் அனைத்தும் புற்றால் மூடியிருக்கக் கண்டு திடுக்கிட்டு, ராஜ ராஜனும், நம்பியாண்டார் நம்பியும் வேதனை அடைந்தனர். கிடைத்தது வரை நம்பியைக் கொண்டு தொகுத்தனர், இன்றைக்கு நாம் வாசிக்கும் திருமுறைகள் அனைத்தும் அப்போது தொகுகப்பட்டவை தான்.
ராஜ ராஜன் ஆரியர்களுக்கு இடம் கொடுத்தான், அதை கொடுத்தான், இதை செய்தான் என பேசுபவர்கள் யாரும் த “தேவாரம்” திருவாசகம், திருமந்திரம் போன்ற தமிழின் உன்னதமான படைப்புகளை கிடைக்கச் செய்தவனே ராஜ ராஜன் தான் என்பதை ஏனோ பேச மறுக்கிறார்கள். பக்தியும், வரலாறு பின்னிக்கிடக்கும் அந்த திருநாரையூர் “பொள்ளாப் பிள்ளையார் கோயிலுக்கு ஒருமுறையேனும் சென்று தரிசனம் செய்து வாருங்கள்.அங்கே ராஜ ராஜனின் சிலையும், நம்பியாண்டார் நம்பி சிலையும் இன்றும் உள்ளது. அவர்கள் உங்களை ஆசிர்வதிப்பார்கள்.