கருப்புத்தலைவன் நான் சொல்கிறேன். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாறும். விஜயகாந்த்
கருப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங், ‘ஒரு நாள் நிச்சயம் மாற்றம் வரும்’ என்று கூறியது போல, கருப்புத் தலைவனான நான் சொல்கிறேன் விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என தருமபுரியில் நடைபெற்ற தேமுதிக கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளார்.
தருமபுரி மாவட்ட தேமுதிக சார்பில் நேற்று முன்தினம் இரவு தருமபுரி-பென்னாகரம் சாலையில் சத்யா நகர் பகுதியில் ‘மக்களுக்காக மக்கள் பணி’ என்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா பேசினர்
விஜயகாந்த்: கருப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங், ‘ஒரு நாள் நிச்சயம் மாற்றம் வரும்’ என்றார். கருப்புத் தலைவனான நான் சொல்கிறேன் விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவுள்ளது. தொழில் வாய்ப்புகள் இல்லாத இந்த மாவட்டத்தில் தான் தொழிற்சாலைகள் அவசியம் தேவை. அவற்றை அமைக்கத் தேவையான வளங்கள் இங்கே உள்ளன. மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு எங்கே அதையெல்லாம் செய்யப்போகிறது. இனி ஒரு போதும் அதிமுக-வை ஆட்சியில் அமரவிட மாட்டோம்.
பிரேமல்தா: தருமபுரி மாவட்டத்தில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால்தான் இங்குள்ள தொழிலாளர்கள் ஆந்திராவுக்கு செம்மரம் வெட்டச் சென்று உயிரிழக்கின்றனர். தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் திட்டங்கள் கிடப்பில் உள்ளன. இந்நிலையில் தற்போது மாவட்டம் முழுக்க டெங்கு உள்ளிட்ட மர்மக்காய்ச்சல் வாட்டி வதைக்கிறது.
வறட்சி காரணமாக கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் 10 சதவீதம் கால்நடைகள் அழிந்துள்ளன. விவசாயிகளின் இந்த வேதனையை போக்க இந்த அரசுக்கு அக்கறையில்லை. மக்கள் பயணிக்கும் பேருந்துகள் அனைத்தும் ஆபத்தான நிலையில் இயங்குகின்றன. அதை கண்டுகொள்ள அரசுக்கு நேரமில்லை. ஆனால், அரசு திட்டங்களை விளம்பரம் செய்ய கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மாவட்டந்தோறும் சொகுசு வாகனம் வழங்குகின்றனர். தமிழகத்தில் லஞ்சம், ஊழல் ஒழிந்து வேலைவாய்ப்பு பெருக விஜயகாந்தை ஆட்சியில் அமர்த்துங்கள் என்றார்.
நிகழ்ச்சி முடிவில், கணினி, ஜெராக்ஸ் இயந்திரம், தள்ளுவண்டி, பரிசல் உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு விஜயகாந்த் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர், மாவட்ட அவைத்தலைவர் தம்பி ஜெய்சங்கர், நகர செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
English Summary: TN rule will be changed soon said Vijayakanth