பிலிப்பைன்சில் பயங்கர பூகம்பம்

பிலிப்பைன்சின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள போகோல் தீவில் நேற்று காலை 8.12 மணியளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. 15 முதல் 20 நொடிகள் வரை பூமி குலுங்கியதில், இங்குள்ள கார்மன் நகரில் கட்டிடங்கள், தேவாலயங்கள், பாலங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன.

ரோடுகள் விரிசல் அடைந்தன. மக்கள் அதிகம் வசிக்கும் செபு நகரிலும் ஏராளமான கட்டிடங்கள், மீன்பிடி துறைமுகம் ஆகியவை இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி பலர் அபாய குரல் எழுப்பினர். பீதியடைந்த மக்கள் கட்டிடங்களை விட்டு அவசரமாக வெளியேறினர்.

செபு நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில், அரசின் உதவித்தொகையை பெற நேற்று காலை ஏராளமானோர் கூடியிருந்தனர். பூகம்பம் ஏற்பட்டதும் அவர்கள் பீதியில் வெளியேறினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியாயினர். மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகள் எல்லாம் அவசரமாக வெளியேற்றப்பட்டு தெருவிலும், விளையாட்டு மைதானங்களிலும் தங்க வைக்கப்பட்டனர்.

பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் பலர் மலைப்பகுதிக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 7.2 புள்ளிகள் பதிவாகியது. கார்மன் நகருக்கு கீழே 33 கி.மீ ஆழத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் சுனாமி ஏற்படவில்லை. இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply