கிரீஸ் நாட்டு துறைமுகத்தில் இருந்து 466 பயணிகளுடன் புறப்பட்ட “நார்மன் அட்லாண்டிக்” என்ற பயணிகள் கப்பல் திடீரென தீப்பிடித்து எரிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கப்பலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்க மீட்புப்படை விரைந்துள்ளது. விபத்து ஏற்பட்டுள்ளது.
பட்ராஸ் துறைமுகத்திலிருந்து நேற்று அதிகாலை 5:30 மணியளவில் 411 பயணிகள் மற்றும் 55 கப்பல் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு இத்தாலி நாட்டில் உள்ள அன்கோனா துறைமுகத்துக்கு “நார்மன் அட்லாண்டிக்” என்ற கப்பல் கிளம்பியது. இந்த கப்பல் துறைமுகத்தில் இருந்து கிளம்பிய சிலமணி நேரத்தில் திடீரென கப்பலின் பார்க்கிங் பகுதியில் தீப்பிடித்தாக கூறப்படுகிறது. தீவிபத்து ஏற்பட்ட நேரத்தில் கப்பலானது கிரீஸ் தீவுப்பகுதியான ஓத்தோனோய் அருகே சென்றுகொண்டிருந்தது. உடனடியாக இது குறித்து துறைமுகத்தில் இருந்த மீட்புப்படைக்கு தகவல் அனுப்பிய கேப்டன், உடனடியாக பயணிகள் அனைவரையும் கப்பலில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார்.
கேப்டனின் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு கப்பல்கள், மற்றும் இத்தாலி மற்றும் கிரேக்க நாட்டு விமானங்கள் விரைந்து சென்றுகொண்டுள்ளன. கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் 200 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அக்கப்பலில் பயணம் செய்த மேகா என்ற பயணி பதட்டத்துடன் கூறுகையில், கப்பலில் வரவேற்பறையில் நாங்கள் இருக்கும் நிலையில் எங்கள் காலில் உள்ள ஷூ தகிக்கிறது, எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.
கப்பல் உள்ள பகுதியிலும் வானிலை மோசமாக உள்ளதால் மீட்பு முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது வரை கப்பலில் இருந்து 55 பயணிகள் வேறு கப்பலுக்கு மாற்றப்பட்டுள்ளபதாகவும், மேலும் 150 பேர் உயிர்காக்கும் படகில் ஏற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எஞ்சியுள்ள பயணிகளின் நிலை என்னவானது என்று இது வரை எதுவும் தெரியவில்லை.