தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேர்களை ஆந்திர போலீஸார் ஈவு இரக்கமின்றி திருப்பதி வனப்பகுதியில் சுட்டுக் கொலை செய்த விவகாரம் தொடர்பாக ஆந்திர காவல்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஆந்திர மாநில ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆந்திர அரசு அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆந்திர மனித உரிமை அமைப்பு தாக்கல் செய்த மனு ஒன்றை விசாரணை செய்த ஐதராபாத் ஐகோர்ட், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஆந்திர மாநில டிஜிபி அளித்த விளக்க அறிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஆந்திர போலீஸ் மீது ஏன் கொலை வழக்கு பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினர். மேலும் 302வது பிரிவின் கீழ் ஆந்திர காவல்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். இவ்விவகாரத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்படுவதே நியாயம் வழங்குவதாக இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆந்திர ஐகோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவால் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும், காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆந்திர மாநில அரசை கலைத்துவிட்டு அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்று தமிழகத்தின் சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால் ஆந்திர அரசு கலக்கத்தில் உள்ளது.