‘நான் இந்தியாவின் மைந்தன்’ புத்தமத தலைவர் தலாய்லாமா பேச்சு

 ‘நான் இந்தியாவின் மைந்தன்’ புத்தமத தலைவர் தலாய்லாமா பேச்சு

அம்பேத்கரின் பிறந்த தினத்தையொட்டி மாநில அளவிலான கருத்தரங்கம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. முதல்-மந்திரி சித்தராமையா கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி ஜூலை மாதம் சர்வதேச கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 58 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

ஆட்சி அதிகாரம் பணக்காரர்களின் கைகளில் இருக்கக்கூடாது, அது ஒரு முக்கியமான சாவி என்று அம்பேத்கர் கூறுவார். நாம் எல்லோரும் வாய்ப்புகள் கிடைக்காமல் வஞ்சிக்கப்பட்டவர்கள். அவர் ஒதுக்கி கொடுத்த வாய்ப்புகளை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாய்ப்புகள் கிடைக்காதவர்களுக்கு உதவ வேண்டும். சாதி நடைமுறையை ஒழிக்கும்வரை சமத்துவத்தை ஏற்படுத்த முடியாது. இதற்காக போராடுபவர்களுக்கு அம்பேத்கரின் கொள்கைகள் வழிகாட்டியாக உள்ளன.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட புத்தமத தலைவர் தலாய்லாமா பேசியதாவது:-

நான் இந்தியாவின் தொன்மையான ஞானத்தின் தூதர். இந்தியாவின் மைந்தன் என்றே என்னை கருதுகிறேன். சமுதாயத்தில் புரையோடியுள்ள நிலப்பிரபுத்துவ நடைமுறைகளால் மக்கள் சுரண்டப்படும் பிரச்சினை உள்ளது. இது ஒழிக்கப்பட வேண்டும். நாம் சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும் கருதி வாழ்ந்தால் சுரண்டல் என்பது இருக்காது.

இன்றைய பிரச்சினைகளுக்கு மூல காரணம் ஒன்றே குலம் என்ற பார்வை இல்லாததுதான். பல்வேறு மதங்களின் கொள்கையில் வேற்றுமை இருக்கலாம். ஆனால் எல்லா மதங்களும், மனிதநேயம், கருணை, அகிம்சை ஆகியவற்றை போதிக்கிறது. எந்த மதமும் சாதி பேதங்கள், ஏற்றத்தாழ்வுகளை வலியுறுத்துவது இல்லை. அமைதி, அன்பை வலியுறுத்துகின்றன. சமுதாயத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் ஏமாற்றப்பட்ட மக்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உயர வேண்டும். வளர்ச்சிக்கு மூல காரணம் கல்வி. சமூகநீதியில் இருந்து ஏமாற்றப்படும் மக்கள் கல்வி பயின்று முன்னேற வேண்டும்.

இவ்வாறு தலாய்லாமா பேசினார்.

Leave a Reply