ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகிய இருவரும் நேற்று ஐதராபாத் நகரில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா முதல்வர், “என்னை சிலர் ஹிட்லர் போல செயல்படுவதாக கூறுகின்றனர். அவர்கள் சொல்வது உண்மைதான். தெலுங்கானா மக்களின் நன்மைக்காக ஹிட்லரை விட மோசமாக நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் நடந்த சந்திப்பு சுமுகமாக இருந்ததாகவும், இரு மாநில அரசு ஊழியர்களை பிரித்துக்கொள்வது குறித்து அவரிடம் கலந்து ஆலோசித்ததாக கூறிய சந்திரசேகர ராவ், தெலுங்கானா மக்களின் தேவைகள் குறித்து அறிவதற்காக சர்வே ஒன்று எடுக்க தான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சர்வேக்கு ரூ.20 கோடி பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சர்வேயின் முடிவு கிடைத்த பின்னர் தன்னுடைய அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று கூறியுள்ளார்.
தான் ஹிட்லரை போல சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்வதாக சிலர் தன் மீது குற்றம் சாட்டியதாக கூறும் ராவ், தேவைப்பட்டால் ஹிட்லரை விட மோசமாகவும் நடந்துகொள்வேன் என்று கூறியுள்ளார். இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆந்திர மாநிலத்தின் சட்டசபை கூட்டம் முடிந்த பிறகு தெலுங்கானா சட்டசபை கூடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.