”வழக்கு தொடர்ந்தால் சந்திக்கத் தயார்”: புதுவை அரசுக்கு கிரண்பேடி சவால்

”வழக்கு தொடர்ந்தால் சந்திக்கத் தயார்”: புதுவை அரசுக்கு கிரண்பேடி சவால்

புதுச்சேரி துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டத்தில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் மாநில அரசுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

புதுச்சேரி துறைமுகத் திட்டப் பணியை புதுச்சேரி அரசு அசுர வேகத்தில் செயல்படுத்தி வருகிறது. ஆனால், ”அரசியல்வாதிகளுக்கு தங்க முட்டையிடுவது போன்ற இந்தத் திட்டத்தால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை. ஏற்கெனவே பிரெஞ்சுக்காரர்களால் பலமுறை முயற்சி செய்யப்பட்டு முடியாமல் விட்டுவிட்டனர். அதனால் இந்தத் திட்டத்துக்கு செலவிடும் தொகையை மீனவர்களின் நலன்களுக்காக செலவிடலாம்” என்று முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. ஆனால், அதைக் கண்டுகொள்ளாத அரசு துறைமுகப் பணியை முழு வீச்சில் முடுக்கிவிட்டதோடு, “துறைமுகம் தொடர்பாகவும் அதனைத் தூர் வாரும் பணி தொடர்பாகவும் துணைநிலை ஆளுநர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து முட்டுக்கட்டை போடுகிறார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடு மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியவைகளாக உள்ளது” என்று கிரண்பேடியை கடுமையாக விமர்சித்திருந்தார் முதல்வர் நாராயணசாமி.

இந்நிலையில், கிரண்பேடி சமூக வலைதளத்தில், “துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகளை எடுத்துச் செல்ல இருக்கும் புறவழிச் சாலை திட்டத்தின் நிலை என்ன? சரக்குகளை ஏற்றிச்செல்லும் கண்டெய்னர் லாரிகளின் போக்குவரத்து எப்படி மேற்கொள்ளப்படும்? புதிய துறைமுகப் பகுதியில் அதற்கான அடையாளப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதா? துறைமுகப் பகுதியில் சேரும் குப்பைகளை அகற்றப் போகும் தனியார் நிறுவனம் எது? அது எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டது? அதற்கான நிதி எங்கே? பணி நிமித்தமாக துறைமுகத்துக்கு வந்து செல்வோர் தங்கிச் செல்ல என்ன ஏற்பாடுகள் செய்திருக்கிறீர்கள் ? துறைமுகத்தின் இயக்குநர் உட்பட 64% பணியிடங்கள் காலியாக இருக்கிறது. தொழில்நுட்பப் பணியாளர் இடங்களும் அப்படியே. இதுதவிர பெரும்பாலான தொழிலாளர்கள் விருப்ப ஓய்வில் சென்றுவிட்டனர். அப்படி இருக்க பணிகளை எப்படி மேற்கொள்ள முடியும் ? மீனவர்களின் விசைப் படகுகள், படகுகள் எப்போது எங்கே இடமாற்றம் செய்யப்பட இருக்கிறது? என்று பல்வேறு கேள்விகளை அதிரடியாக எழுப்பியிருக்கிறார்.

இதற்கிடையில், சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு கிரண்பேடி அளித்த பேட்டியில், “புதுச்சேரி அரசு மீதான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் என்னிடம் தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. இது தொடர்பாக புதுச்சேரி அரசு வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க நான் தயார். என்னை வைத்து புதுச்சேரி அரசை கவிழ்க்க முயற்சிப்பதாக வரும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply