தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொல்லவில்லை என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேற்று இலங்கை அதிபர் ராஜபக்சே பேட்டியளித்தார்.
இந்த பேட்டியில் அவர், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் கொலை தொடர்பாக விசாரணைகள் நடைபெறுகின்றன என்றும், போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதுதான் அவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்றும் கூறியுள்ள ராஜபக்சே, அவருடைய கொலைக்கும் இலங்கை ராணுவத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினார். மேலும் அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், ஒருவேளை ராணுவத்தினர் மீது தவறு இருந்தால் அது விஷயமாக கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இந்திய மத்திய அரசாங்கத்துடன் கொண்டுள்ள நல்லுறவை தமிழக முதல்வருடனும் தொடர தனது அரசு முயற்சிகள் மேற்கொண்டதாகவும், ஆனால் தனது எண்ணம் ஈடேறவில்லை என்றும் தெரிவித்துள்ள ராஜபக்சே, அதற்காக என்ன செய்யமுடியும்? என்றார். இப்போதுகூட தாம் அவருடன் சமாதானத்துக்காக வெள்ளைக்கொடியை உயர்த்திக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.