தேமுதிக மாவட்ட செயலாளர்களை நானே திமுகவுக்கு அனுப்பி வைக்கின்றேன். ஆனால் ஒரு கண்டிஷன். பிரேமலதா
தேமுதிகவின் வடசென்னை மாவட்ட செயலாளர் யுவராஜ் நேற்று திடீரென தேமுதிகவில் இருந்து விலகி கருணாநிதி, ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஆனாலும் உடனடியாக வடசென்னைக்கு மாற்று மாவட்ட செயலாளரை சிலமணி நேரத்தில் விஜயகாந்த் அறிவித்தார்.
இந்நிலையில் தேமுதிகவின் மாவட்ட செயலாளர்களுக்கு திமுகவில் மாவட்ட செயலாளர் பதவியை கொடுக்க திமுக தயாராக இருந்தால் நானே தேமுதிக மாவட்ட செயலாளர்களை திமுகவுக்கு அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன்’ என்று பிரேமலதா விஜயகாந்த் நேற்று திண்டுக்கல் நகரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஆவேசமாக பேசினார்.
மேலும் கேப்டன் விஜயகாந்துக்கு உரிய மரியாதை சட்டசபையில் வழங்கப்படவில்லை என்றும், அதனால் இனிமேல் சட்டமன்றத்திற்குள் நுழைந்தால் முதல்வராகத்தான் நுழைவேன் என்று அவர் சபதம் செய்துள்ளதாகவும் பிரேமலதா கூறியுள்ளார்.
மேலும் ‘தமிழகத்தில் தே.மு.தி.க.வுக்கு இணையாக எந்த ஒரு கட்சியும் இல்லை என்றும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சிகள் என மக்களால் முத்திரை குத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.