தந்தைக்கு எதிராக புதிய கட்சியா? உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் பேட்டி
உத்தரபிரதேச அரசியலில் கடந்த சில நாட்களாக முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும், அவரது தந்தை முலாயம்சிங் யாதவுக்கும் இடையே கடும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. முலாயம்சிங் யாதவின் சகோதரர் ஷிவ்பால் யாதவ் முதல்வர் அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்களை சமாஜ்வாதி கட்சியில் இருந்து சமீபத்தில் அதிரடியாக நீக்கினார்.
இதற்கு பதில் நடவடிக்கையாக சித்தப்பா ஷிவ்பாலை அமைச்சரவையில் இருந்து நீக்கியதோடு, அவருக்கு ஆதரவாக செயல்பட்ட 3 அமைச்சர்களையும் நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்தார் அகிலேஷ். ஆனால் இதற்கு தந்தை முலாயம் சிங் யாதவிடம் இருந்து எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கவில்லை.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் கட்சியின் வெற்றியை பாதிக்கும் என்று கூறப்படும் நிலையில் அகிலேஷ் யாதவ் தனிக்கட்சி தொடங்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து கருத்து கூறிய அகிலேஷ், ;’தந்தை முலாயம்சிங் விரும்பினால் முதல்வர் பதவியில் இருந்து விலகத் தயார் என்றும் தனது தந்தை யாரை சிறந்தவராக கருதுகிறாரோ அவரை முதல்வராக நியமனம் செய்ய தான் முழு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும், தந்தைக்கு எதிராக புதிய கட்சி எதுவும் தொடங்கும் எண்ணமில்லை” என்றும் கூறினார்.