மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமாபாரதி நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டால் அவர் மீதான அவதூறு வழக்கைத் திரும்பப் பெறத் தயார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கூறினார்.
கடந்த 2003ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, ரூ. 15,000 கோடி அளவுக்கு திக்விஜய் சிங் ஊழலில் ஈடுபட்டதாக உமாபாரதி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக உமாபாரதி மீது திக் விஜய் சிங் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சனிக்கிழமை மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் திக்விஜய் சிங் ஆஜரானார். பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீதிமன்றத்தில் உமாபாரதி என்னிடம் மன்னிப்பு கேட்டால் அவர் மீது நான் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை வாபஸ் பெற்று விடுவேன்.
உமா பாரதி என் மீது ரூ. 15,000 கோடி அளவுக்கு ஊழல் புகார் கூறியிருந்தார். ஆனால் நான் 15 ரூபாய் ஊழல் செய்ததாகக் கூட அவரால் நிரூபிக்க முடியாது என்று திக்விஜய் சிங் தெரிவித்தார்.