ராம்குமாரை பிடிக்க போலீசார் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். இன்போசிஸ் நிறுவன அதிகாரி
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் ஊழியர் சுவாதி கொலையில் கடந்த ஒருவாரமாக கொலையாளியை பிடிக்க முடியாமல் இருந்த நிலையில் கடந்த வெள்ளி இரவு ராம்குமார் என்பவர் செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டார். இந்த ஒரு வாரத்தில் போலீசார் மிக அபாரமாக விசாரணை மேற்கொண்டு கொலையாளியை பிடித்த விதம் குறித்து இன்போசிஸ் நிறுவன அதிகாரி எச்.ஆர் சுஜித் குமார் தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். அவர் ஃபேஸ்புக்கில் கூறியதாவது:
கடந்த 5 நாட்களாக நான் தினமும் 15 மணி நேரமாவது போலீஸாருடன் செலவிட்டேன். ஆனால், போலீஸார் பட்ட கஷ்டத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் எங்களுடைய கஷ்டம் மிகவும் குறைவு.
போலீஸாரின் விசாரணையை பார்த்து நான் வியந்துள்ளேன். இந்த வழக்கை விசாரிக்க குறிப்பிட்ட சில திறமையான போலீஸாரை தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்தனர். அந்த போலீஸாரின் அர்ப்பணிப்பு மற்றும் பொறுமையை பார்த்து நான் வியந்துள்ளேன். போலீஸாரின் ஒரே குறிக்கோள், இந்த வழக்கில் கிடைக்கும் சிறு சிறு தடயங்களையும், ஆதாரங்களையும் சேகரிப்பதாக மட்டுமே இருந்தது. சாட்சியங்களை பேச வைக்க அவர்கள் செய்த முயற்சிகள் அனைத்தும் அபாரம்.
விசாரணை அதிகாரிகள் பலரும், இந்த கொலையை, தங்களுக்கு நேர்ந்த அவமானமாகவே கருதி பணியாற்றினர். ஒரு நாள் இரவு 1 மணியிருக்கும். போலீஸ் அதிகாரி ஒருவர் என்னிடம் கூறுகையில், சார்.. ஆயுதம் இன்றி நிராயுதபாணியாக நின்ற ஒரு பெண் பிள்ளை மீது அரங்கேற்றப்பட்ட கொடூர கொலை இது. என்ன விலை கொடுத்தாவது கொலையாளியை நாங்கள் பிடித்தே தீர வேண்டும். அல்லது, பொதுமக்கள், அச்சத்தோடே வாழ வேண்டி வரும். அதிலும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இது பீதியை ஏற்படுத்திவிடும் என தெரிவித்தார்.
எங்கள் அலுவலகத்தில் வேலை பார்ப்போர் மதியம் அல்லது இரவு சாப்பாட்டுக்கு கேபினை விட்டு வெளியே வரும்போது, போலீஸார் ஓடிவந்து அவர்களிடம் பேச்சு கொடுத்து, சுவாதி பற்றி விசாரிப்பார்கள். பல நேரங்களில், போலீஸார் ஒரு கப் காபியோ, டீயோ மட்டுமேதான் குடித்து வேலை பார்த்ததை பல நேரங்களில் பார்த்துள்ளேன்.
நள்ளிரவில் கூட ஆய்வு கூட்டம் இருக்கிறது என்பார்கள். காலையிலேயே அடுத்தகட்ட விசாரணைக்கு போலீஸார் தயாராக இருப்பார்கள். நேற்று முன்தினம் இரவு நான் வீட்டுக்கு திரும்பி டிவி பார்த்தபோது, சுவாதி கொலையாளி பிடிபட்டதாக செய்தி பார்த்தேன். ஒரு அதிகாரிக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அது உண்மையா என கேட்டேன். சில நிமிடங்களிலேயே ‘யெஸ் சார்’ என பதில் வந்தது. நிம்மதியாக தூங்கினேன். இவ்வாறு அவர் தனது முகநூல் பதிவில் பதிவு செய்துள்ளார்.