வெளிநாடுகளில் எவ்வளவு கருப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது. மோடி

modi radio speechபாரத பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் நரேந்திர மோடி நேற்று இரண்டாவது முறையாக  வானொலி மூலம் “மன் கீ பாத்’ என்ற நிகழ்ச்சி மூலம் சிறப்புரை ஆற்றினார். அவருடைய உரையில் கூறியதாவது:

வெளிநாடுகளில் இருந்து கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர முடியும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு. இதைச் செய்து முடிப்பதற்கான முயற்சிகளில் எந்தக் குறைபாடும் இல்லை. உங்கள் (மக்களின்) ஆதரவு தொடர வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவதற்கான அணுகுமுறையில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், கருப்புப் பணத்தை மீட்பதில் நான் உறுதியுடன் இருக்கிறேன். இந்த விவகாரத்தில், முதன்மைச் சேவகனான என் மீது இந்த நாடு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்.

இந்த நாட்டின் ஏழை மக்களுக்குச் சொந்தமான பணம் வெளியே சென்றுள்ளது. அதன் ஒவ்வொரு பைசாவும் நாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இதுவே எனது லட்சியமாகும்.

வெளிநாடுகளில் எவ்வளவு கருப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது; யாருக்கும் தெரியாது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடமும் இது தொடர்பான மதிப்பீடு ஏதும் இல்லை.

கருப்புப் பணத்தின் அளவு குறித்து அவரவரும் சொந்தமாக ஒரு கணக்கைப் போட்டு வைத்துள்ளனர். அந்த மதிப்பீடுகள் குறித்து விவாதிக்க நான் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமோ, அவை அனைத்தும் விரைவில் எடுக்கப்படும்.

கல்வி உதவித்தொகை: நாட்டில் உள்ள சிறப்புத் திறன் வாய்ந்த குழந்தைகள் 1000 பேருக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மூலம் சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இத்தகைய குழந்தைகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக கேந்திரீய வித்யாலயப் பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் அளிக்கப்படும். நாட்டில் நல்ல தொடக்கம் ஏற்பட்டுள்ளது. நாடு மிகப்பெரிய மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் துறை பிரபலங்களும், பொதுமக்களும் பாராட்டுக்குரியவர்கள். இது தேசிய அளவிலான பிரசார இயக்கமாக மாறும் என்று யாரும் எதிர்பார்த்தார்களா? இதற்கு மக்களின் விழிப்புணர்ச்சியே காரணம்

இவ்வாறு  மோடி வானொலியில் உரையாற்றினார்.

Leave a Reply