கொள்கை பிடிப்புள்ள எவரும் ஸ்டாலின் தலைமையை ஏற்க மாட்டார்கள். மு.க.அழகிரி

azhagiri and stallinதி.மு.க.வுடன் நான் சமரசமாகி விட்டதாக வெளிவந்துகொண்டிருக்கும் தகவல் தவறானது என்றும் இனிமேல் சமரசம் ஏற்பட வாய்ப்பே இல்லை என சமீபத்தில் திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட மு.க.அழகிரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட் அறிக்கை ஒன்றில் கூறியதாவது”தி.மு.க.வினர் மற்றும் தமிழர்கள் அனைவரும் கருணாநிதியைத்தான் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நானும் இதைத்தான் ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறேன். கொள்கை பிடிப்புள்ள அனைவரும் கருணாநிதியின் தலைமையைத்தான் ஏற்றுக் கொள்வார்கள். ஸ்டாலின் தலைமையை ஏற்கமாட்டார்கள்.

தி.மு.க.வின் உள்கட்சி தேர்தல் முறையாக நடக்கவில்லை. கட்சியில் இல்லாதவர்களையும் உறுப்பினர்களாக சேர்த்து தேர்தல் நடத்துகிறார்கள். நெல்லை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்கட்சி தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதை நான் ஆதாரத்துடன் கொடுக்க தயாராக இருக்கிறேன். என்னுடைய கோரிக்கைகள் எதுவுமே நிறைவேறவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியை நான் சந்திக்க தேவை இல்லை. சந்திக்கவும் மாட்டேன்.

நான் தி.மு.க.வில் சமரசமாகி விட்டதாக சிலர் கூறி வருகின்றனர். அவர்கள் இதுபோன்று கூறுவதால் சமரசம் ஏற்பட்டு விடாது. நான் கட்சியில் இல்லாததால் உண்மையான கட்சிக்காரர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் உண்மை. மற்றபடி நான் கட்சியில் சேரலாம் என்று வந்த செய்தியால் கட்சி நிர்வாகிகள் யாரும் பயப்படவில்லை”

இவ்வாறு மு.க.அழகிரி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply