தமிழக மீனவர்களை மட்டும் விடுவித்துவிட்டு அவர்களின் படகுகளை பிடித்து வைத்துக்கொள்ள தாம் இலங்கை அரசுக்கு ஆலோசனை கூறவிலை என சுப்பிரமணியசாமி அந்தர் பல்டி அடித்துள்ளார்.
”தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள். அவர்கள் தொழிலாளர்கள், அதனால் அவர்களை விடுவித்துவிடுங்கள். ஆனால், அவர்களது படகுகளின் உரிமையாளர்கள் பணக்காரர்கள். அதை விடுவிக்க வேண்டாம். நான் சொன்னதைத்தான் இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது என்று வட இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சுப்பிரமணியம் சுவாமி பேட்டி அளித்திருந்தார்.
சுவாமியின் இந்த கருத்துக்கு தமிழக அரசியல் கட்சிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. நேற்று முதல்வர் ஜெயலலிதா சுவாமியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். முதல்வரின் கடிதம் வெளியான சிலமணி நேரத்தில் சுப்பிரமணியம் சுவாமி தான் அவ்வாறு பேட்டி கொடுக்கவில்லை என்று அந்தர் பல்டி அடித்துள்ளார்.
இன்று காலை அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், “நான் மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் கூறவே இல்லை. இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்கவே நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன். ஆனால், பொறாமை காரணமாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் என்னை குறை கூறுகின்றனர் என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.