இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் வாக்களிக்க மாட்டேன். மு.க.அழகிரி
தி.மு.க.வின் முன்னாள் தென் மண்டல பொறுப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், தி.மு.க.வுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை அவர் கூறி வருகிறார். தேர்தல் சமயத்தில் அவர் ஏதாவது கருத்தை கூறினால் அது திமுகவின் வெற்றியை பாதிக்கும் என தலைமை கருதி மு.க.அழகிரியை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் இந்த சமாதானத்தை மு.க.அழகிரி ஏற்றதாக தெரியவில்லை.
இந்நிலையில் இந்த தேர்தலில் தன்னுடைய ஆதரவு எந்த கட்சிக்கும் இல்லை என சமீபத்தில் அறிவித்த அழகிரி தற்போது திடீரென மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் தி.மு.க. தோல்வி அடையும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஆங்கில பத்திரிகை ஒன்று அவர் அளித்த பேட்டியில், ”ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் நான் பேசி குறைந்தது 3 வருடங்களாவது இருக்கும். அவர்களிடம் பேசுவதற்கு எந்தவிதமான வாய்ப்பும் எனக்கு ஏற்படவில்லை. என்னை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தி.மு.க.வுக்கு தெரியவில்லை. எனவே, அக்கட்சி குறித்து கருத்து ஏதேனும் சொல்ல விரும்பவில்லை. இதுபோன்ற அரசியலில் ஆர்வம் காட்டவும் நான் விரும்பவில்லை.
ஆனால், மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறப்போவதில்லை என்பது மட்டும் எனக்கு தெரியும். அதே நேரத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில், நான் எந்த கட்சிக்கும் வாக்களிக்கப் போவதில்லை” என்று கூறினார்.