மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் நிதீஷ்குமாரா?
வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணியை அமைக்க மாநில கட்சிகள் முயன்று வருகிறது. மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக பீகார் முதல்வர் நிதீஷ்குமார், மேற்குவங்க முதல்வர் மம்தா, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் பட்டியலில் இருக்கும் நிலையில் தனக்கு பிரதமர் ஆகும் ஆசை இல்லை என்றும் ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.ஆக விருப்பம் என்றும் நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பிகார் தலைநகர் பாட்னாவில் ‘சூப்பர் 30’ திட்டத்தின் நிறுவனர் ஆனந்த் குமாரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் நிதீஷ் குமார், “எனது வாழ்க்கையில் ஒருமுறையாவது நாடாளுமன்ற உறுப்பினராகி விட வேண்டும் என்பது மட்டும்தான் விருப்பமாக இருந்தது. அமைச்சராகவோ, முதல்வராகவோ அல்லது பிரதமராகவோ வேண்டும் என்று நான் கனவில் கூட ஆசைப்பட்டது இல்லை. பிரதமராகும் ஆசை எனக்கு இல்லாத போதும், இதை வைத்து எனக்கு அவப் பெயர் ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சி செய்கின்றனர்.
அரசியலுக்கு நான் வந்த ஆரம்ப காலத்தில், தொடர்ந்து 2 முறை சட்டப்பேரவைத் தேர்தல்களில் தோல்வியடைந்தேன். அதைக் கண்டு நான் பொறுமையிழக்கவில்லை. தொடர்ந்து கடினமாகப் பணியாற்றினேன்’ என்று கூறினார்.
மத்தியில் இருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை நிதீஷ் குமார் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் பாஜக இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து அடுத்த மக்களவைத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று அவர் தெரிவித்து வருகிறார். இதையடுத்து, பாஜக இல்லாத கட்சிகளைக் கொண்ட கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக நிதீஷ் குமார் முன்னிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.