பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது இரண்டு வருட உழைப்பில் தனது குழுவினர்களுடன் இணைந்து உருவாக்கிய, உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ‘ஐ’ படத்தினை இண்டர்நெட்டில் திருட்டுத்தனமாக வெளியிட ஒரு கும்பல் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்து கொண்டிருக்கின்றது.
பிரபல தெலுங்கு இணையதளம் ஒன்று ‘ஐ’ படத்தின் முழு ஸ்கிரிப்டையும் தனது இணையதளத்தில் வெளியிட்டு, படக்குழுவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘ஐ’ படத்தின் தெலுங்கு பதிப்பான மனோகருடு என்ற தலைப்பில் அந்த இணையதளம் படத்தின் முழு கதையையும் விலாவரியாக வெளியிட்டுள்ளது. இதனால் ஆஸ்கார் ரவிச்சந்திரன் உள்பட ‘ஐ’ படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
விக்ரம் மற்றும் எமி ஜாக்சன் முதல் சந்திப்பிலிருந்து, விக்ரம் மாடலாக முயற்சி செய்வது, அவருக்கு வில்லன் கெமிக்கல் மருந்து ஒன்றை கொடுத்து அவருடைய உடலமைப்பை கவர்ச்சியாக மாற்றுவது, பின்னர் விக்ரமுக்கு அந்த கெமிக்கலினால் அலர்ஜி ஏற்பட்டு அதன் காரணமாக விபரீதமான உருவத்தை அடைவது, எமி ஜாக்சனை கடத்துவது என்று படத்தின் ஒவ்வொரு ஸ்கிரிப்டையும் அந்த இணையதளம் வெளியிட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த படத்திற்காக ஷங்கர் சுமார் 10,000 பேர்களுடன் இரவு பகல் பாராமல் தூக்கமின்றி உழைத்த உழைப்பை ஒரே நொடியில் திருடி இண்டர்நெட்டில் வெளியிடும் துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும் என திரையுலகம் கொதித்துபோய் உள்ளது. ஐ படத்தின் தெலுங்கு பதிப்பில் பணிபுரிந்த ஒரு துரோகிதான் முழு ஸ்கிரிப்டையும் அந்த இணையதளத்திற்கு கொடுத்திருக்க வேண்டும் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுபோன்ற முறைகேடான செயல்களை பல இணையதளங்கள் கண்டித்துள்ளன. அந்த வரிசையில் நாமும் இந்த செயலுக்கு எங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.