புதுவையை விட்டு வெளியேறிவிடுவேன். கிரண்பேடி அதிரடி பேச்சு
இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி சமீபத்தில் புதுவையினர் கவர்னராகி பல புதிய திட்டங்களையும் புதுமையையும் செய்து வரும் நிலையில் தான் ஒரு நல்ல நோக்கத்துக்காக புதுவை வந்துள்ளதாகவும், அந்த நோக்கம் நிறைவேற ஒத்துழைப்பு இல்லாவிட்டால் புதுவையை விட்டு வெளியேறுவேன் என்றும் கூறியுள்ளார்.
நேற்று புதுவையில் மாரத்தான் போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பேசியதாவது:
”துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றது முதல் தற்போதைய ஞாயிற்றுக்கிழமை வரை நான் மேற்கொண்டது 20-வது அதிகாலை ஆய்வாகும். 6 மணிக்கு எல்லாம் வார இறுதி நாட்களில் நகரை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறேன். தெருக்களை தூய்மைப்படுத்துவது துணைநிலை ஆளுநரின் வேலை இல்லை. அது நம்முடைய பணி. குப்பைக்கிடங்குக்கு பலமுறை சென்று விட்டேன். தெருக்களில் குப்பைகளை போடும் பொதுமக்களுக்கே அவற்றை தூய்மையாக வைத்திருக்கும் பொறுப்பும் உள்ளது. ஆளுநர் வந்து தெருக்களை சுத்தம் செய்ய முடியாது. சில அதிகாரிகள் என்னுடன் இணைந்து பணிபுரிகின்றனர். ஆனால் சில மூத்த அதிகாரிகள் என்னுடன் பணிபுரிய மறுக்கின்றனர். இது சரியான நடவடிக்கையா.?
கடந்த 5 ஆண்டுகளாக குரும்பாபட்டு குப்பை கிடங்கால் நச்சுப் புகையை அப்பகுதி மக்கள் சுவாசித்து வருகின்றனர். நிதி இல்லாமையால் அங்கு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. நான் தொடர்ந்து உங்களுக்குப் பணிபுரிய வேண்டும் என்றால் நீங்களும் என்னுடன் இணைய வேண்டும். நீங்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் நான் மீண்டும் திரும்பிச் சென்று விடுவேன்.
நான் வேலையில்லாமல் இங்கு வரவில்லை. எனக்கு பல்வேறு பணிகள் உள்ளன. எனக்கு 2 தொண்டு நிறுவனங்கள் உள்ளன. பல கல்லூரிகளில் கற்பிக்கும் பணி உள்ளது. நான் வீட்டை விட்டு இங்கு சேவை புரிய வந்துள்ளேன். நான் மட்டுமே பணிபுரிய வேண்டும் என நினைத்தால் அது தவறாகும்.
மழைக்காலம் வருகிறது. வெள்ள பாதிப்புகளை முன்கூட்டிய தடுக்க வேண்டும். நான் தொடர்ந்து இங்கு இருக்கப் போவதில்லை. நான் ஒரு நோக்கத்துக்காக வந்துள்ளேன். அது நிறைவேறவில்லையென்றால் நான் திரும்பி விடுவேன். அரசே அனைத்தையும் செய்ய வேண்டும் என நினைத்தால் அது தவறாகும். குப்பைகளை போடுவோரை நீங்கள் தடுத்து நிறுத்த வேண்டும். சில வாரங்களில் பொதுமக்கள் தூய்மைப்பணியில் ஈடுபட வரவில்லை என்றால் நான் எனது உடமைகளுடன் சென்று விடுவேன்.
எனது அடுத்த அதிகாலை ஆய்வின் போது கண்டிப்பாக அமைச்சர், அதிகாரிகள் உடனிருக்க வேண்டும். தூய்மைப் பணிக்கு வருவது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்கள், மூத்த அதிகாரிகளின் கடமையாகும். நீங்கள் தான் மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்கின்றனர். அவர்களை கேள்வி கேட்க வேண்டியது மக்களின் கடமையாகும்.
காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்கள் தூய்மைப் பணியில் சிறப்பாக ஈடுபடுகின்றன. இதில் புதுச்சேரி தான் பின் தங்கி உள்ளது. ஆளுநர் மாளிகை என்பது எனது வீடல்ல. அலுவலகமாகும். இதனால் தான் மக்களுக்காக அதை திறந்து விட்டுள்ளேன். ஒன்றரை மாதங்கள் உங்களுக்கு அவகாசம் தருகிறேன். தூய்மையான பணிக்கு மக்கள் ஒத்துழைப்பு தராவிட்டால் அக்டோபர் மாதம் நான் சென்று விடுவேன் என்று கிரண்பேடி குறிப்பிட்டார்.