எனது விவகாரத்தை பெரிதாக்கினால் ப.சிதம்பரம், சசிதரூர் ரகசியங்களை வெளியிடுவேன். லலித மோடி மிரட்டல்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், லலிதமோடிக்கு உதவிய விவகாரத்தை காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் இதுவரை அமைதியாக இருந்த லலிதமோடி தற்போது காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தான் விரைவில் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும்,அந்த் சந்திப்பில் காங்கிரஸ் ஆட்சியாளர்களின் ரகசியங்களை வெளியிடுவேன்’ என்றும் அவர் மிரட்டியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து லலிதமோடி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ”இந்த விவகாரம் தொடர்பாக எனது தரப்பு கருத்துகளை செய்தியாளர்களிடம் தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளேன். அந்தச் செய்தியாளர்கள் சந்திப்பை, மத்திய முன்னாள் அமைச்சர்கள் ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித், சசி தரூர், முன்னாள் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் பார்க்க வேண்டும்.
சுஷ்மா ஸ்வராஜை பதவி விலகுமாறு கேட்கிறார்கள். ஆனால், அந்தச் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு பலர் பதவி விலக நேரிடும்” என்று கூறியுள்ளார்.
மேலும் லலிதமோடியின் வழக்கறிஞர் மஹமூத் எம்.அப்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, ”லலித் மோடி குற்றவாளியா, இல்லையா என நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் லண்டனில் தற்போது இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்தச் சூழலில், அவர் தலைமறைவாக உள்ளார், தப்பியோடிவிட்டார் போன்ற சொற்களைப் பயன்படுத்துவது சட்டப்படி தவறானது” என்றார்.