நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழா ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் பத்ம பூஷன் விருதினை பெற்ற பின்னர் அவர் ஃபேஸ்புக்கில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தன்னுடைய கருத்தை தெரிவித்தார். அதில் முன்பு ஒருமுறை கோபத்தில் இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்று கூறியதற்காக வருந்துவதாகவும் இனி எந்த சூழ்நிலையிலும், இந்தியாவை விட்டு வெளியேறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறினார்.
ஜனாதிபதி மாளிகையின் சரித்திர அழுத்தமும், என்னுடன் விருது பெற்றவர்களின் தனிப்பெரும் சாதனைகளும் எனக்கு மீண்டும் பணிவு கற்றுத்தந்தது. இத்தகைய விழாக்களை நடத்தவேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விக்கான பதில் எனக்குக் கிடைத்தது. எனக்கு வழங்கப்படும் விருது என்னை பெருமைப்படுத்த மட்டும் அல்ல, என் மண்ணையும் பெருமைப்படுத்தும் செயல். மீண்டும் ஒரு முறை குடிமகனாக என் கடமைகளை நிறைவேற்ற உறுதிமொழி அளிக்கும் விழாவாகவும் நான் இதை உணர்ந்தேன். தேசியகீதம் இசைத்த போது மனது ஏனோ நெகிழ்ந்தது. நான் ஒரு பெரும் விருட்சத்தின் விழுது என்பதுணர்ந்து நெஞ்சம் விம்மியது. மனத்திரையில் தேசபக்தியுள்ள என் தாய் தந்தையாரின் முகம் தோன்றி மறைந்தது. கொஞ்சம் குழந்தைத்தனமான உணர்வு என்றாலும் பிடித்திருந்தது. ஒரு சிலர் இந்தியா கிரிக்கெட் விளையாடி வென்றால் புல்லரித்துப் போவார்கள். நான் இந்தியா எத்துறையில் வென்றாலும் பூரிப்படைவேன். இன்று பல்துறை வித்தகர்களுடன் தோழுரசி நின்றதில் பெருமை கொள்கிறேன். இன்னும் இப்பெருமைப் பெறப்போகிறவர்களையும், பெறாவிட்டாலும் தன் கடமையைச் செய்யப்போகும் இந்தியர்களையும், என் மனம் நெடுஞ்சான் கிடையாக விழுந்து வணங்கியது. இனி இந்தியாவில் எனக்கு எவ்விதமான நெருக்கடி வந்தாலும், இந்தியாவை விட்டு வெளியேற மாட்டேன். முன்பு ஒருமுறை இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என கோபத்தில் கூறியதற்காக உண்மையில் வருந்துகிறேஎன்.