அரசு பள்ளியில் பெண் ஐஏஎஸ் அதிகாரியின் மகள்: மற்றவர்களும் கடைபிடிப்பார்களா?
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் அவர்கள் ஒரு வழக்கின்போது அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முயற்சிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இவருடைய கருத்தின்படி சென்னை மாநகராட்சி பள்ளியில் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது மகளை எல்.கே.ஜி வகுப்பில் சேர்த்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையராக பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி லலிதா, தனது மகள் தருணிகாவை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் மாநகராட்சி தொடக்க பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பில் சேர்த்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது ‘தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளிலும் தற்போது தரம் உயர்ந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே அரசு பள்ளியில் தனது ஒரே மகளை சேர்த்ததாகவும் கூறியுள்ளார்.
லலிதா ஐஏஎஸ் போல் மற்ற அதிகாரிகளும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும் அப்போதுதான் அரசு பள்ளிகளின் தரமும், மாணவர்கள் தேர்ச்சி ஆகும் விகிதமும் அதிகரிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.