ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை. டாப்-10-ல் இருந்து வெளியேறினார் தோனி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் மொத்தமுள்ள ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில் தற்போது ஐசிசி ஒருநாள் போட்டிகள் பேட்டிங் தரவரிசை குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ரோஹித் சர்மா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆனால்கேப்டன் தோனி 7 இடங்கள் சரிவடைந்து டாப்-10-க்கு வெளியே சென்று விட்டார். அவர் தற்போது 13-வது இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தொடர்நாயகனாக தேர்வான ரோஹித் சர்மா 2 சதங்கள் மற்றும் ஒரு 99 என்று 441 ரன்களை குவித்தார். இதனையடுத்து தரவரிசையில் அவர் 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இப்போதுதான் அவர் 10 இடங்களுக்குள் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மற்றொரு இந்திய வீரரான விராட் கோலி 2-ம் இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் டிவில்லியர்ஸ் இருந்தாலும் இவருக்கு இரண்டாவது இடத்தில் உள்ள விராத் கோஹ்லிக்கும் இடையே 75 புள்ளிகள் வித்தியாசம் இருப்பதால் இவரது முதல் இடத்தை இப்போதைக்கு யாராலும் அசைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அணிகள் தரவரிசையில் இந்தியா கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதால் 2ஆம் இடத்தைத் தக்க வைத்துள்ளது.
பந்துவீச்சு தரப்பட்டியலை பொறுத்த வரையில் டாப் 10-ல் இருந்த அஸ்வின் 2 இடங்கள் பின்னடைந்து 11-வது இடத்துக்கும், புவனேஷ் குமார் 7 இடங்கள் சரிந்து 20-வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளார். நியூஸிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் 2-ம் இடத்தில் உள்ளார்.