பிடிவாதம் தொடர்ந்தால் ஓபிஎஸ் அணிக்கே பாதிப்பு. ஜெயகுமார்
சசிகலா, தினகரன் ஆகிய இருவரும் சிறைக்கு சென்றுவிட்ட நிலையில் தற்போதுதான் அதிமுக முதல்முறையாக சசிகலா குடும்பத்தினர் ஆதிக்கம் இன்றி உள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலையிலான அணியும், ஓபிஎஸ் தலைமையிலான அணியும் இணைய கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
ஓபிஎஸ் அணியினர்களின் நிபந்தனைகளில் சில ஏற்க முடியாத வகையில் உள்ளதால் பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இனிமேல் ஒன்றாக இணைந்து செயல்பட மாட்டோம் என்றும், தேவைப்பட்டால் தனித்து நின்று, பெரும்பான்மை நிரூபிக்கவும் தயார் என்றும், ஓபிஎஸ் அணியினர் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். இதன்காரணமாக, 2 அணிகளும் இணையும் வாய்ப்பும், இரட்டை இலை சின்னத்தை பெறும் வாய்ப்பும் மங்கிவிட்டதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் பேச்சுவார்த்தை முறிவு குறித்து நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: பன்னீர்செல்வம் தரப்போடு பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம். அவர்களின் கோரிக்கையை கேட்டு, அதனை நிறைவேற்றுவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். ஆனால், அவர்கள் தொடர்ந்து விடாப்பிடியாக நடந்துகொள்கின்றனர். இதனால், அவர்களுக்கே அதிக பாதிப்பு. எங்களுக்கு எந்த இழப்பும் வர வாய்ப்பில்லை.,’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.