செம்மர கடத்தலை தடுக்காவிட்டால் திருப்பதி ஏழுமலையானுக்கே பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். சந்திரபாபு நாயுடு
ஆந்திராவில் செம்மரக்கடத்தலை இனியும் தடுக்காவிட்டால் திருப்பதி ஏழுமலையானுகே பாதுகாப்பில்லாமல் போய்விடும் என்றும், செம்மரக்கடத்தலில் ஈடுபடுவது நாட்டுக்கு செய்யும் துரோகம் என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆவேசமாக கூறியுள்ளார்
ஆந்திர மாநிலத்தில் புதிய தலைநகராக அமையவுள்ள அமராவதிபட்டணத்தின் உள்கட்டமைப்பு குறித்து ஆலோசனை செய்ய முதல்வர் சந்திரபாபு நாடு நேற்று சிங்கப்பூர் சென்றார். இதற்காக அவர் நேற்று சென்னை விமானநிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஆந்திராவில் செம்மரக்கடத்தல் விவகாரத்தில் நடந்த தமிழர்கள் மீதான துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. அதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
செம்மரக்கட்டைகள் இந்தியாவில் அழிந்து வரும் அபூர்வ மரம். அதை காப்பாற்ற வேண்டியது நமது கடமை. கடத்தல் ஆசாமிகள் செம்மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பிறகும் ஆந்திராவில் கடத்தல் சம்பவம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. செம்மரக்கடத்தலில் ஈடுபடுவது நாட்டுக்கு செய்யும் துரோகம். ஜனநாயகத்துக்கு விரோதமானது. அதை அனுமதிக்க முடியாது.
செம்மரக்கடத்தலை தடுக்க ஆந்திர போலீசார் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செம்மரக்கடத்தலை தொடரவிட்டால் திருப்பதி வெங்கடாசலபதிக்கே பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். ஆந்திராவில் தெலுங்கு மொழி கட்டாயப்பாடம் இல்லை. ஆனால், தமிழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தமிழை முதல் பாடமாக படிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் தெலுங்கு பேசும் மக்கள் தமிழை முதல் பாடமாகவும், தெலுங்கை 2வது பாடமாகவும் எடுக்கின்றனர். ஆந்திராவில் உள்ளது போல் பிராந்திய மொழிகளுக்கு தமிழகத்தில் முக்கியத்துவம் தரவேண்டும். இது தொடர்பாக அவசியம் ஏற்பட்டால் நானே நேரில் வந்து தமிழக முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்துவேன்.
ஆந்திர மாநிலத்துக்கு புதிய தலைநகராக அமராவதிபட்டினத்தை தேர்வு செய்து இருக்கிறோம். அங்கு தலைநகர் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி நடக்கிறது. அமராவதிபட்டினத்தில் கிருஷ்ணா நதி இருக்கிறது. சுற்றிலும் நீர்நிலைகள் நிறைந்த பகுதியான அங்கு தலைநகர் அமைவதால் செழிப்புடனும், வளத்துடனும் இருக்கும். இதற்கு ஆந்திர மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். புதிய தலைநகர் அமராவதிபட்டினம் உள்கட்டமைப்பு பற்றிய வரைவு படம் தயாரிக்கும் பணியில் சிங்கப்பூரில் உள்ள அரசு ஏஜென்சி ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பான முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகதான் நான் சிங்கப்பூர் செல்கிறேன்” என்றார்.