ஸ்டாலின் திமுகவின் முதல்வர் வேட்பாளர் என்றால், நேருக்கு நேர் சந்திக்க தயார். அன்புமணி
வரும் 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனியாக நிற்க முடிவு செய்திருக்கும் பாமக, சமீபத்தில் முதல்வர் வேட்பாளராக அன்புமணியை அறிவித்திருந்தது. இந்நிலையில் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டால், அவரை நேருக்கு நேர் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
வரும் 2016ஆம் ஆண்டு நடக்கவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இப்பொழுது முதலே ஈடுபட்டு வரும் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் , இன்று www.anbumani4cm.com என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார். சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை நடந்த விழாவில், இந்த புதிய இணையதளம் தொடங்கப்பட்டது.
இணையதளத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்புமணி, ”திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு கால ஆட்சியில் சாராயமும், ஊழலும்தான் அதிகரித்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும். அந்த மாற்றத்தை என்னால் கொடுக்க முடியும். எங்கள் மீது சில குறைகள் சொல்லப்படுகின்றன. அவற்றை திருத்திக் கொள்வோம். தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி வேண்டும், கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி வேண்டும் என்று யாரும் கேட்பதில்லை. எல்லோரும் காமராஜர் ஆட்சியைத்தான் கேட்கின்றனர். அப்படிப்பட்ட ஆட்சியை எங்களால் கொடுக்க முடியும்.
எங்கள் கட்சியில் என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளனர். அதேபோல திமுகவில் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், அவரை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
மத்திய அமைச்சராக இருந்தபோது பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளேன். புகையிலைப் பொருட்களுக்கு முடிவு கட்டினேன். அதனால் தமிழக முதல்வராக எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். இலவசங்கள் கொடுக்க மாட்டோம். விவசாயம், கல்வி, வேலைவாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் தருவோம். ஜாதி, மத பேதமின்றி அனைத்து சமுதாய மக்களுக்காகவும் பாடுபடுவோம்”
இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.