லஞ்சத்தை ஒழிக்க முடியாவிட்டால், ‘லஞ்சம் பெறும் உரிமை சட்டம்’ கொண்டு வர வேண்டும் என பீகார் எம்.எல்.ஏ. ராஜீவ் ரஞ்சன் அவர்களின் சர்ச்சை பேச்சு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டிலேயே அதிக அளவு லஞ்சம் பீகார் மாநிலத்தில்தான் உள்ளதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இதனால் பீகார் ஆளும் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ ராஜீவ் ரஞ்சன் அவர்கள் பீகார் அரசால் லஞ்சத்தை ஒழிக்க முடியாவிட்டால் லஞ்சத்தை சட்டபூர்வமாக்க சட்ட மசோதா கொண்டுவர வேண்டும் என கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜீவ் ரஞ்சன் எம்.எல்.ஏ ”பீகாரில், ஒவ்வொரு ஒப்பந்தத்துக்கும் காண்டிராக்டர்களுக்கு 12 முதல் 20 சதவீதம் வரை லஞ்சம் தர வேண்டி உள்ளது. பீகார் அரசால் லஞ்சத்தை ஒழிக்க முடியாவிட்டால், தகவல் பெறும் உரிமை சட்டம் போன்று லஞ்சம் பெறும் உரிமை சட்டத்தை கொண்டு வாருங்கள். மேலும், லஞ்சம் வாங்குவதற்கு சட்ட அந்தஸ்து வழங்குவதற்கான தனி நபர் மசோதாவை பீகார் சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டு வரப்போகிறேன். பீகார் அரசால் லஞ்சத்தை ஒழிக்க முடியாததால் ஏற்பட்ட விரக்தியாலும், கோபத்தாலும் இந்த கோரிக்கையை விடுக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ராஜீவ் ரஞ்சன் எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சு முதல்வர் நிதிஷ்குமார் உள்பட ஆளுங்கட்சி தலைவர்களை பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் கொறடா ஷர்வன் குமார் தெரிவித்துள்ளார்.