மோசடி செய்தால் கிடைக்கும் தண்டனை…

201602111440584420_Punishment-for-cheating-if-_SECVPF

பாதை என்றால் நிலப்பரப்பில் அமைந்துள்ளது மட்டுமே என நாம் தவறாக விளங்கிக் கொண்டிருக்கிறோம். நீர்ப்பரப்பில் அமைந்துள்ளதும் பாதை தான் என்பதை நடு நிலையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

‘பாதை’ என்பதற்கு ‘மார்க்கம்’ என்றும் தமிழ் அகராதியில் மொழியப்படுகிறது. தரை வழிப்பாதையை ‘தரை மார்க்கம்’ என்றும்,  கடல் வழிப்பாதையை ‘கடல் மார்க்கம்’ என்றும், ஆகாய வழிப் பாதையை ‘ஆகாய மார்க்கம்’ என்றும், நீர் வழிப்பாதையை ‘நீர் வழி மார்க்கம்’ என்றும் நீர் வழிச்சாலைகள், நீர்ப்பிடிப்புகள், நீர்நிலைகள், நீர்த்தேக்கம் எனவும் பல வழிகளில் அழைக்கப்படுகிறது.

பாதைக்கு கொடுக்க வேண்டிய உரிமைகள் எனும் போது மேற்கூறப்பட்ட அனைத்து வகையான பாதைகளுக்கும் நாம் உரிய மரியாதையை கொடுத்தே ஆகவேண்டும். நிலப்பாதைக்கு என்ன உரிமை உண்டோ அதே உரிமையும் நீர் வழிப்பாதைக்கும் உண்டு. இரண்டையும் பிரித்து விட முடியாது.

நீர்வழிப்பாதைக்கும், நில வழிப்பாதைக்கும் கொடுக்க வேண்டிய உரிமைகள் குறித்து நபி மொழி வருமாறு:

ஒருமுறை நபிகளார் தோழர்களிடம் கூறும்போது, ‘நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்து விடுங்கள்’ என்றார்கள்.

அப்போது மக்கள், ‘இறைத்தூதரே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்து தான் பல விஷயங்களை) நாங்கள் பேசிக்கொள்கிறோம்’ என்றார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(அங்கு) நீங்கள் அமர்ந்து தான் ஆகவேண்டும் என்றிருந்தால் சாலைக்கு அதன் உரிமையை கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார்கள்.

மக்கள் ‘இறைத்தூதரே! சாலையின் உரிமை என்ன? என்று வினவினர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘1. (அந்நிய பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்ளவேண்டும், 2. பாதசாரிகளுக்குச் சொல் மற்றும் செயலால் துன்பம் தராமல் இருக்க வேண்டும், 3. சலாமுக்கு பதில் தரவேண்டும், 4. நன்மை புரியும் படி ஏவ வேண்டும், 5. தீமையிலிருந்து தடுக்க வேண்டும்’ –இது தான் அதன் உரிமைகள் என  பதில் கூறினார்கள்’’ (அறிவிப்பாளர்: அபூ ஸயீத் குத்ரி (ரலி) திர்மிதி)

இந்த நபி மொழியில் கவனிக்க வேண்டிய அம்சம் யாதெனில் பாதசாரிகளுக்கு பாதையில் அமர்ந்தோ, ஆக்கிரமித்தோ சொல், செயலால் நோவினை தரக்கூடாது. இன்று நில வழிப்பாதையும், நீர் வழிப்பாதையும் ஒரு சிலரால் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டு விடுவதால், மழைக்காலத்தில் நீர் வழிச்சாலையில் நீர் செல்ல முடியாமல் நில வழிச்சாலையிலும் புறவழிச்சாலையிலும் நீர் வடிந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் நீர் புகுந்து விடுகின்றது.

அது எந்தப் பாதையாயினும் அதில் அமர்ந்து அதை ஆக்கிரமித்து பாதசாரிகள் செல்ல முடியாமலும் நீர்வரத்து செல்லமுடியாமலும் தடுத்துக் கொண்டிருப்பதும், அடைத்துக் கொண்டிருப்பதும் பெரும் பாவம். அது பாதைக்கு செய்யும் துரோகம். இத்தகைய ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடும் தண்டனை உண்டு என இஸ்லாம் கூறுகிறது.

‘‘பூமியில் தனக்கு உரிமையற்ற நிலத்தை அபகரிப்பவன், மறுமை நாளில் ஏழு பூமிகள் வரை பூமிக்குள் சொருகப்படுவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’’. (அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) புகாரி)

‘‘நிலத்தில் (எல்லையின்) அடையாளத்தை மாற்றியவனை இறைவன் சபித்து விட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ (நூல்: முஸ்லிம்)

‘‘ஒரு சாண் அளவு நிலத்தில் அநீதியாக அபகரிப்பவனுக்கு (மறுமையில்) ஏழு பூமிகள் வரை அந்த நிலத்தை தோண்டுமாறு இறைவன் தண்டனை அளிப்பான். பின்பு வேறு மக்களுக்கு தீர்ப்பளிக்கப்படும் வரை அது அவனது கழுத்தில் வளையமாக தொங்கவிடப்படும்’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நிலப்பகுதிகளையும், நீர் நிலைப்பகுதிகளையும் ஆக்கிரமிப்பது குறித்து இஸ்லாம் தமது வன்மையான கண்டனத்தை பதிவு செய்திருக் கிறது. நீர் நிலைப் பகுதிகளை நாம் ஆக்கிரமித்தால் உலகிலும் நமக்கு அழிவு. மறுமையிலும் நமக்கு இழிவு. தண்டனையும் நிச்சயம்.

48 வகையான நீர்நிலைகள் உண்டு. இன்றைய காலச்சூழலில் இத்தகைய நீர் நிலைகள் எங்கே போனது? ஆம். ஏரிகள் ஏரியாக்களாக, கண்மாய்கள் கட்டிடங்களாக, ஊரணிகள் ஊர் அணிகளாக, குளங்கள் விளையாட்டு திடல் களாக, மடைகள் கடைகளாக, ஓடைகள் நடை பாதைகளாக ஆக்கிரமிப்பாளர்களால் அபகரிக் கப்பட்ட போது மழை பெய்தது அல்ல பொங்கியது. நீர்நிலைகளை நாம் அழித்தால் அது நம்மை அழித்துவிடும். இனியும் நீர் வழிப்பாதைகளை அடைத்து அடைக்கலம் தேட வேண்டாம். அதுவல்லாத அபயம் தரும் இடங்களைத் தேடி இல்லங்களை அமைப்போம்.

‘‘நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்து கொண்டு, இறைவிசுவாசிகளை பயமுறுத்தி, இறைவனின் பாதையை விட்டுத்தடுத்து அதில் கோணலை உண்டுபண்ணாதீர்கள்’’ என்று எச்சரிக்கிறது திருக்குர்ஆன் (7:86).

‘‘நிலத்தின் எல்லைகளை மாற்றியமைத்து தனது நில அளவை அதிகரித்துக் கொள்வது மோசடியாகும்’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹமது)

Leave a Reply