சென்னை ஐஐடி மாணவர் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம். தலைவர்கள் வரவேற்பு.

chennai iitசென்னை ஐ.ஐ.டி.யில் இயங்கி வந்த மாணவர்களின் அமைப்பான அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் என்ற அமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையால் பெரும் சர்ச்சை நாடு தழுவிய அளவில் ஏற்பட்டதால், அந்த தடை நீக்கப்பட்டு உள்ளதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பை சேர்ந்த மாணவர்கள், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் கொள்கைகள்  மற்றும் இந்து மதம் ஆகியவற்றை கடுமையாக விமர்சித்து துண்டு பிரசுரங்கள் வினியோகித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதை அடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் மாணவர்களின் இந்த அமைப்பிற்கு தடை விதித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐ.ஐ.டி. நிர்வாகம் உத்தரவிட்டது.

ஐஐடி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து நாடு தழுவிய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக சங்கம், இந்திய மாணவர் சங்கம், பல்வேறு அரசியல் கட்சிகள் ஆகியவை பங்கு கொண்டன.

இந்த பிரச்னை நாடு அளவில் சர்ச்சை ஏற்படுத்தியதை அடுத்து  நேற்று ஐஐடி நிர்வாகம், மாணவர்கள் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டதை அடுத்து அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்துக்கான தடை விலக்கிக்கொள்ளப்பட்டதாகவும், சுதந்திரமான அமைப்பாக அது மீண்டும் இயங்கவும் அனுமதிக்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஐ.ஐ.டி. நிர்வாகமும், மாணவர்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. மேலும், சுதந்திரமான மாணவர் அமைப்புகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை பொறுத்தமட்டில், பேராசிரியர் மிலிந்த் பிரம்மே அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் ஆலோசகராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply