இளையராஜாவுக்கு திடீர் மூச்சுத்திணறல். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை
1000 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்து கின்னஸ் சாதனை புரிந்த இசைஞானி இளையராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
73 வயதான இளையராஜாவுக்கு ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இருதய பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்த நிலையில், தற்போது அவருக்கு மீண்டும் அதே பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அவரது உறவினர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
இளையராஜா, கடந்த வெள்ளிக்கிழமை தனக்காக பிரத்யேக யூடியூப் இணையதளம் ஒன்றை தொடங்கி வைத்தார். அன்று இரவு, அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இளையராஜாவுக்கு தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து நேற்று அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் என்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர் தற்போது உடல் நலம் தேறி வருவதாகவும், இன்னும் சில நாட்களில் முழு நலத்துடன் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.