ரஜினியை அடுத்து நூற்றாண்டு விருதை பெற்ற இளையராஜா
சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ‘நூற்றாண்டு விருது’ கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கிடைத்த நிலையில் இந்த வருடம் இந்த விருது இசைஞானி இளையராஜாவுக்கு கிடைத்துள்ளது.
நேற்று கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்ற 46வது சர்வதேச திரைப்பட விழாவில் நூற்றாண்டு விருதை மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கினார்.
விருதை பெற்றுக்கொண்ட பின்னர் இளையராஜா பேசியதாவது, “உலகம் முழுவதும் இன்று வன்முறை அதிகரித்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து பள்ளி, கல்லூரிகளில் இசையை கட்டாய பாடமாக்க வேண்டும். இசையால் வன்முறை எண்ணங்கள் எழுவதை தடுக்க முடியும்’’ என்று கூறினார்.
இதே விழாவில் ரஷ்ய திரைப்பட தயாரிப்பாளர் நிகிதா மிக்கல்கோவ்வுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவையொட்டி நடந்த கலைநிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அனில்கபூர் பங்கேற்று, 1989-ம் ஆண்டு ஹிட்டாக ஓடிய ‘மை நேம் இஸ் லக்கான்’ திரைப்பட பாடலுக்கு நடனமாடி அரங்கை அதிரவைத்தார்.