ஷங்கரின் கப்பல் படத்தில், தனது கரகாட்டக்காரன் பாடலைப் பயன்படுத்தியதற்காக அதன் தயாரிப்பாளரும் பிரபல இயக்குனருமான ஷங்கருக்கு இசைஞானி இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இயக்குனர் ஷங்கர் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் ‘கப்பல்’ திரைப்படம் வெளியானது. கார்த்திக் ஜி கிரீஷ் இயக்கிய இந்த படத்தில் நடராஜன் சங்கரன் என்பவர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சியில், கரகாட்டக்காரன் படத்துக்காக இளையராஜா இசையமைத்த ”ஊரு விட்டு ஊரு வந்து…” பாடலை அப்படியே பயன்படுத்தியுள்ளனர்.
தனது அனுமதியின்றி இந்தப் பாடலைப் பயன்படுத்தியதைக் கண்டித்தும் அதற்கான இழப்பீடு கோரி இளையராஜா ஷங்கர் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் கப்பல் படக்குழுவினர் இசைஞானியின் பாடல்களுக்கு உரிமை பெற்ற அகி மியூசிக் என்ற நிறுவனத்திடம் முறைப்படி அனுமதி வாங்கியபின்னர்தான் படத்தில் அந்த பாடல் பயன்படுத்தியதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஊருவிட்டு ஊருவந்து பாடலின் காப்பிரைட் உரிமை இளையராஜாவிடம் மட்டுமே உள்ளது என்றும் இந்தப் பாடலை தன்னுடைய அனுமதியின்றி திரையிலும், ரேடியோ, டி.வி., விளம்பரங்களிலும் இதுவரை பயன்படுத்தியதற்கான ராயல்டியை உடனே தனக்கு வழங்க வேண்டும் என்றும் மேலும் இந்தப் பாடல் காட்சியை உடனடியாக படத்தில் இருந்து நீக்கவேண்டும் என்றும் தவறினால் நீதிமன்றத்தில் காப்பி ரைட் சட்டப்படி கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளைத் தொடரப்படும் என்றும் இளையராஜா அனுப்பிய வக்கீல் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.