இரண்டு பேர் மட்டும் வேண்டவே வேண்டாம். சோனியாவுக்கு இளங்கோவன் கடிதம்

இரண்டு பேர் மட்டும் வேண்டவே வேண்டாம். சோனியாவுக்கு இளங்கோவன் கடிதம்

evksதேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ராஜினாமா செய்ததை அடுத்து அடுத்த தலைவர் யார்? என்பதை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகிய இருவரையும் குஷ்பு சந்தித்ததால், அவர் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் ப. சிதம்பரம், சு. திருநாவுக்கரசர் ஆகிய இருவரைத் தவிர வேறு யாரை தலைவராக நியமித்தாலும் அவர்களுக்கு தான் முழு ஆதரவும் அளிக்க தயாராக இருப்பதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை பிடிக்க முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், சு. திருநாவுக்கரசர், எஸ். பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இளைய தலைமுறை தலித் முகமான முன்னாள் எம்.பி. பி. விஸ்வநாதன் ஆகியோர் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் சோனியா காந்தியை சந்தித்து அடுத்த தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து கருத்து தெரிவிக்க இளங்கோவன் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு வருவதாகவும், ஆனால் இளங்கோவனை சந்திப்பதை சோனியா காந்தி தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இளங்கோவன், சோனியா காந்திக்கு ஒரு கடிதம் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

சோனியா காந்திக்கு இளங்கோவன் அனுப்பியிருக்கும் அந்த கடிதத்தில் மாநிலத் தலைவர் பதவிக்கு பரிசீலனையில் இருக்கும் ப. சிதம்பரம், சு. திருநாவுக்கரசர் ஆகிய இருவர் குறித்தும் கடுமையாக விமர்சித்து எழுதி இருப்பதாக தெரிகிறது. பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்குக் கூட தேர்தலில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற முடியாத அளவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லாத தலைவர் ப. சிதம்பரம் என்பதையும் அதிபுத்திசாலியான அவர் சாமானிய மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவோ கட்சித் தொண்டர்களை அரவணைத்துச் செல்லவோ தெரியாத ஒருவர் என்பதையும் விளக்கியிருக்கிறார்.

அதேபோல, சு. திருநாவுக்கரசர் கடந்த முறை பாஜக ஆட்சியில் இருக்கும்போது அந்தக் கட்சியால் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சராக்கப்பட்டவர் என்பதை இளங்கோவன் குறிப்பிட்டிருக்கிறார். அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் நம்பிக்கை துரோகம் செய்திருக்கும் அவரை நம்பி காங்கிரஸின் தலைமை பொறுப்பை அளித்துவிட முடியாது என்றும் திமுக, அதிமுக இரண்டிலும் தன்னை சேர்த்துக் கொள்ளாததால் காங்கிரஸில் இணைந்த சந்தர்ப்பவாதி அவர் என்றும் இளங்கோவன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இவர்கள் இருவரையும் தவிர வேறு யாரை கட்சித் தலைவராக நியமித்தாலும் அவர்களுக்கு தான் முழு ஒத்துழைப்பையும் தர தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார் இளங்கோவன். பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் கடைசி மூச்சு வரை காங்கிரஸ்காரனாகவும் நேரு குடும்பத்தின் விசுவாசியாகவும் தொடருவேன் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் எழுதியிருப்பதாக தெரிகிறது.

Leave a Reply