1000 திரைப்படங்களுக்கு இசையமைத்து அபூர்வ உலக சாதனை செய்த இசைஞானி இளையராஜா தனது பாடல்களின் உரிமைகள் அனைத்தையும் தயாரிப்பாளர் சங்கத்திடம் வழங்கியுள்ளார்.
அன்னக்கிளி படத்தில் தனது இசைப்பயணத்தை தொடங்கிய இளையராஜா கடந்த 45 ஆண்டுகளில் 1000 படங்களில் சுமார் 4500 பாடல்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார். சமீபகாலமாக அவருடைய பாடல்களை அவருடைய அனுமதியின்றி ஒருசில நிறுவனங்கள் விற்பனை செய்து வருவதாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இசைஞானி இளையராஜா திடீரென ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
தான் இசையமைத்த 1000 படங்களின் பாடல்களின் உரிமைகள் அனைத்தையும் தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வழங்கியுள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான கலைப்புலி தாணுவிடம் இவருடைய 1000 படங்களின் பாடல்கள் உரிமைகள் அனைத்தும் நேற்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் இளையராஜா கூறும்போது, ‘இனிமேல் என்னுடைய இசையை அதிகாரப்பூர்வமாக உலகளவில் எந்தவொரு மொபைல் நிறுவனமும், உலகளாவிய இணையதளங்களிலும், யூடியூப், டெய்லி மோஷன் போன்ற இன்னும் பல வீடியோ இணையதளங்களிலும், ஆடியோ, வீடியோ விளம்பரங்களிலும், ரீமிக்ஸ் செய்யவோ, எப்.எம்., டிவியில் ஒலி / ஒளிபரப்பவோ, மேடை நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் முறையற்ற வகையில் இசையை உபயோகிக்கவோ தயாரிப்பாளர் சங்கத்தில் முறையான அனுமதி பெற வேண்டும். விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் தெரிவித்தார்.