நேபாளத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டின் 3000க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்நிலையில் நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அங்கு சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நேபாளத்தில் சிக்கிய இந்திய சுற்றுலாப்பயணிகள் பெரும்பாலானோர் ஒரே நாளில் பத்திரமாக மீட்கப்பட்டு நாடு திரும்பிய நிலையில் நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தங்கள் நாட்டு மக்களை மீட்க இந்தியா உதவி செய்ய வேண்டும் என்று ஸ்பெயின் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி கார்சியா-மார்கலோ, பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று டெல்லியில் பாரத பிரதமர் மோடியை நேரில் சந்தித்த ஸ்பெயின் மந்திரி மோடியிடம் வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த பிரதமர் மோடி ஸ்பெயின் மக்களை மீட்க சாத்தியமுள்ள அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.
மேலும் ரெயில்வே துறையில் ஸ்பெயின் நாட்டின் ஒத்துழைப்பு குறித்தும் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தில் ஸ்பெயின் நிறுவனங்கள் பங்கேற்று, இந்தியாவில் உற்பத்தி தளங்களை அமைக்க வேண்டும் என்றும் மோடி அழைப்பு விடுத்தார்.
மேலும், ஸ்பெயின் பிரதமரின் அழைப்பை ஏற்ற மோடி, ஸ்பெயினுக்கு 2016ல் சுற்றுப் பயணம் செய்வதாகவும் கூறினார்.