நடிகர், நடிகைகளுக்கு அவர்களுடைய ரசிகர்கள் கோவில் கட்டி வழிபடுவதை போல பிரதமர் மோடிக்கு குஜராத்தில் அவரது ஆதரவாளர்கள் கோவில் கட்டி வழிபட்டுள வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் என்ற இடத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரின் ஆதரவாளர்கள் கோயில் கட்டி வழிபாடு செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் ரு 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் மோடியின் உருவச்சிலை ஒன்றை அமைத்து அதற்கு பூஜை செய்து வருகின்றனர்.
இந்த சிலையை ஒடிசாவை சேர்ந்த சிற்பக்கலைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.
மத்திய வேளாண்மை துறை இணை அமைச்சர் மோகன்பாய் கல்யான்ஜிபாய் குண்டாரியா, வரும் 15 ஆம் தேதி முறைப்படி இந்த கோயிலை முறைப்படி திறந்து வைக்கவுள்ளதாகவும், ஆனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் தற்போதே காலை, மாலை என இரண்டு வேளைகளில் இங்கு பூஜைகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த பகுதி மக்கள் மோடியை இரண்டாவது வல்லபாய் பட்டேலாக கருதி வருகின்றனர். இந்த கோவிலின் முழு செலவையும் ரமேஷ் உன்ஹாட் என்ற மோடியின் தீவிர பக்தர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கோயில் அமைந்திருக்கும் ராஜ்கோட் கிராம தலைவரான மன்சு குமார், ‘ஒவ்வொரு கிராமத்திலும் இதை போன்ற கோயில்களைக் கட்ட வேண்டும்’ என தெரிவித்தார்.