இந்தியாவில் ஆண்டுதோறும் 40 ஆயிரம் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று புற்றுநோய் மருத்துவ நிபுணர் அனிதா ரமேஷ் கூறினார்.
உலக குழந்தைகள் புற்றுநோய் தினம் பிப்ரவரி 15-ஆம் தேதி அனுசரிக்கப்படுவதையொட்டி, சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
நூறு புற்றுநோயாளிகளில் 2 அல்லது 3 பேர் குழந்தைகள். குழந்தைகளை அதிகம் பாதிக்கும் புற்றுநோய் மூளையில் புற்றுநோய் கட்டிகள், ரத்தப் புற்றுநோய் வகைகள் ஆகும். குழந்தைகளுக்கு தங்கள் உடலில் தோன்றும் அறிகுறிகளை வெளிப்படுத்தத் தெரியாது. சில சமயங்களில் பெற்றோர் குழந்தைகளுக்குத் தோன்றும் அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிடுகின்றனர்.
இந்தியாவைப் போன்ற நாடுகளில் பத்தில் 3 குழந்தைகளுக்கு மட்டுமே முழுமையான புற்றுநோய் சிகிச்சை கிடைக்கிறது. ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கத் தொடங்கினால், குழந்தைகளுக்கான புற்றுநோயை முழுவதும் குணப்படுத்த முடியும்.
பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று 5 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்துவிட்டால், அதன் பின்பு பிறரைப் போன்று வாழ முடியும். ஆனால் குழந்தைகளுக்கு 5 ஆண்டுகள் கடந்த பின்பும், பிற்காலத்தில் வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பின்பும் குழந்தைகளுக்கு தொடர் கண்காணிப்பு அவசியம் என்றார்.
இதையடுத்து, கண்களில் ஏற்படும் புற்றுநோய் குறித்து சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் விழி புற்றுநோய் சிகிச்சை நிபுணர் விகாஸ் கேதன் கூறியது:
குழந்தைகளின் கருவிழி வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறமாக மாறுவது, கண்கள் நேர்த்திசையில் இல்லாதது போன்றவை விழியில் புற்றுநோய் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள். அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம் புற்றுநோய் பிற இடங்களுக்கு பரவாமல் தடுத்து, பார்வை இழப்பையும் தடுக்க முடியும் என்றார்.