வெளிநாட்டில் மருத்துவப் படிப்பா?

download

மருத்துவம் படிக்க மட்டும் இந்திய மாணவர்களிடையே எங்கிருந்துதான் ஆர்வம் கரைபுரண்டு வருகிறதோ தெரியவில்லை! எந்த பள்ளி மாணவரைக் கேட்டாலும், வரும் பதில் ‘நான் டாக்டாராக போறேன்’ என்பதே!

மருத்துவம் படிக்க ஆர்வமுள்ள நமது மாணவர்கள் அனைவருக்கும் இந்தியாவில் ‘சீட்’ கிடைப்பதில்லை. தமிழகத்தில், மூன்றாயிரம் இடங்களுக்கு 50 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிகின்றன. பல லட்சங்கள் விளையாடும் நிர்வாக ஒதுக்கீட்டில் மருத்துவ ‘சீட்’ பெருவதும் நடுத்தர மக்களுக்கு சாத்தியம் இல்லை!

அவர்களுக்கான ஒரு சிறந்த மாற்று தான் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு. இதில் வளர்ந்த நாடுகளில் தரமான கல்வி நிறுவனங்களில் இடம் கிடைப்பதும் குதுரை கொம்புதான். மேலும் அக்கல்வி நிறுவனங்களில் எந்த உதவித்தொகையும் இன்றி படிக்க செலவும் அதிகமாகவே இருக்கும். இத்தகைய சூழலில், சிறு சிறு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவ படிப்பில் ஆர்வம் மிகுந்த மாணவர்களைக் கொண்ட இந்தியாவில் வளமான ‘மார்க்கெட்’ உள்ளது என்பதை நன்கு புரிந்து கொண்டுள்ளன.

‘ஐந்தே லட்சம் ரூபாயில் அயல்நாட்டில் மருத்துவம் படிக்கலாம்’, ‘பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் மருத்துவ ‘சீட்’ நாங்கள் வாங்கித்தருகிறோம்’ என்றெல்லாம் வரும் பல்வேறு விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள். இதுபோன்ற அறிவிப்புகளை மட்டும் நம்பி, கண்களை மூடிக்கொண்டு சேர்க்கை பெறுவது சரியான முடிவாக இருக்காது என்பதை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும்.

வெளிநாட்டில் மருத்துவம் படிக்க சில அறிவுரைகளை வழங்குகிறது எம்.சி.ஐ., எனும் இந்திய மருத்துவக் கவுன்சில். வெளிநாடுகளில் வழங்கப்படும் அனைத்து மருத்துவப் படிப்புகளையும் எம்.சி.ஐ., அங்கீகரிப்பதில்லை. எந்த நாட்டில் நீங்கள் மருத்துவம் படித்தாலும், மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப வந்து பயிற்சி செய்ய சில கட்டுப்பாடுகள் உள்ளன. சுருங்கச் சொன்னால், எம்.சி.ஐ., நடத்தும் ‘ஸ்க்ரீன் டெஸ்ட்’ல் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்தியாவில் டாக்டராக பணியாற்ற முடியும்.

மேலும் வெளிநாட்டு மருத்துவப் படிப்பை பொறுத்தவரை, ஒரு சில நாடுகளில் உள்ள குறிப்பிட்ட கல்லூரிகளில் மருத்துவம் படித்தால் மட்டுமே ‘ஸ்க்ரீன் டெஸ்ட்’ எழுத அனுமதி அளிக்கிறது. எம்.சி.ஐ., இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் பட்டியல் இடம் பெற்றுள்ளன.

அதே போன்று வெளிநாட்டில் வழங்கப்படும் ஓர் ஆண்டு முதுநிலைப் படிப்பினை அடிப்படையாக வைத்து இந்தியாவில் அரசு வேலை பெற முடியாது என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, எந்த நாட்டில், எந்த கல்வி நிறுவனத்தில், என்ன படிப்பு என்பதை முன்கூட்டியே சரியாக திட்டமிடுவதும், கல்வி நிறுவனம் மற்றும் பாடப்பிரிவின் அங்கீகாரம், தரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துக் கொள்வதும் மிக அவசியம்!

Leave a Reply