இந்தியா’ தான் எனது மதம். ‘அரசமைப்புச் சட்டம் தான் எனது புனித நூல். மக்களவையில் பிரதமர்
பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் நேற்று கூடியபோது அதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திரமோடி மதம், இந்தியா, மதசகிப்புத்தன்மை குறித்து ஆவேசமாக பேசியுள்ளார். இந்தியா என்பதுதான் தனது மதம் என்றும், இந்தியாவின் அரசியல் சாசனம்தான் தனது புனித நூல் என்றும் அவர் தன்னுடைய பேச்சில் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நேற்று பிரதமர் பேசியதன் தொகுப்பு:
நமது அரசமைப்புச் சட்டத்தின் புனிதத்தன்மையையும் வலிமையையும் மக்கள் உணர்ந்திட வேண்டும். இது காலத்தின் அவசியம். அரசமைப்புச் சட்டத்தின் அடிநாதம் நான், நீ அல்ல, நாம் என்பதே ஆகும். இதை முன்னெடுத்துச் செல்வது அவசியம். இதுதான் அரசின் லட்சியம்.
இந்த ஆண்டு முதல் நவம்பர் 26-ம் தேதி அரசமைப்புச் சட்ட தினம் கொண்டாடப்படும். இது ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தினை எந்த வகையிலும் பலவீனப்படுத்தாது.
நமது தேசத்தை கட்டமைத்ததில் எல்லா அரசுகளுக்கும் பிரதமர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. ஒவ்வொருவரின் பங்களிப்பால்தான் இந்த நாடு வளர்ந்து செழிப்படைந்துள்ளது.
தேசத்தந்தை மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, சட்டமேதை பி.ஆர். அம்பேத்கர் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட்டு நாட்டை கட்டி எழுப்பினர். சுதந்திர காற்றை சுவாசிக்கச் செய்த அவர்களுக்கு நாம் நன்றிக்கடன்பட்டுள்ளோம்.
நாடாளுமன்ற விவாதம் ஒன்றின்போது அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தை ஆமோதித்து ஏற்றுக் கொண்டார். இது அவரது பெருந்தன்மைக்கு உதாரணம்.
அரசர்கள், இளவரசர்களால் உருவாக்கப்பட்டதல்ல நமது நாடு, மக்களால் உருவாக்கப்பட்டது. நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்தி அரசமைப்புச் சட்டத்தின் அனைத்து அம்சங்களையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்தியர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பது நமது அரசமைப்பு சட்டம்தான். தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோரின் நலன்களை சட்டம் பாதுகாக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர், பல்வேறு பாகுபாடுகள், இன்னல்களைச் சந்தித்தார். ஆனால் அவர் எதிர்கொண்ட இன்னல்களை மையப்படுத்தி சட்டத்தை வரையறுக்கவில்லை. அதுதான் அவரது பெருந்தன்மை.
வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் பலம். அதனை மேலும் வலுப்படுத்திட வேண்டும். இந்தியர்கள் அனைவரும் கவுரவத்துடன் வாழ வேண்டும். ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இதுதான் அரசின் விருப்பம்.
‘முதலில் இந்தியா’ என்பதே எனது அரசின் மதம், அரசமைப்புச் சட்டம் புனித நூல் போன்றது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியே நாட்டில் ஆட்சி நடத்தப்படும்.
அனைத்து சமுதாய மக்கள், மதங்களைச் சேர்ந்த மக்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு பாரபட்சமின்றி பாடுபடும். நமது நாட்டில் சுமார் 80 கோடி இளைஞர்கள் உள்ளனர். இதைவிட வேறு வளம் தேவையில்லை. நமது மனித வளத்தை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
English Summary: In the Parliament, we are like one family: PM Shri narendramodi in Lok Sabha