திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவை புகைப்படம் எடுக்க முயன்ற தமிழக ஊடகங்களை சேர்ந்தவர்களை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பதிக்கு சாமிதரிசனம் செய்ய நேற்று வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று சுப்ரபாத தரிசனம் செய்தார். இந்நிலையில், திருமலையில் ராஜபக்சேவை படம்பிடிக்க முயன்ற தமிழக செய்தியாளர்கள் மீது ஆந்திர போலீஸார் அதிரடியாக தாக்குதல் நடத் தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழக செய்தியாளர்கள் 10 பேர்களை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சன் டிவி செய்தியாளர் குணசேகரன், புதிய தலைமுறை மணிகண்டன், தந்தி டிவி காண்டீபன் ஆகியொர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்களின் கேமரா உள்ளிட்ட பொருட்களையும் பறித்து சென்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சாமி தரிசனம் முடிந்து திரும்பி வந்த ராஜபக்சேவுக்கு ம.தி.மு.க.வினர் கறுப்புக்கொடி காட்டினர். கறுப்புக் கொடி காட்டிய ம.தி.மு.க.வினர் மீதும் ஆந்திர போலீசார் தடியடி நடத்தினர். அப்போது, சம்பவ இடத்தில் இருந்த தமிழக செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மீதும் ஆந்திர போலீசார் தாக்குதல் நடத்தினர். செய்தியாளர்கள் வைத்திருந்த கேமரா உள்ளிட்ட உபகரணங்களையும் போலீசார் உடைத்தனர். மேலும் கறுப்புக்கொடி காட்டிய சுமார் 500 மதிமுகவினரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.