ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று மேடை போட்டு உலகம் முழுவதும் பேசிவந்தாலும் இதுவரை தைரியமாக ஒரு திரைப்படம் முகத்தில் அறைந்தால்போல் எடுக்க சீமான் உள்பட எந்த இயக்குனருக்கு தைரியம் வரவில்லை. ஆனால் முதன்முதலாக இரண்டு நாட்டு அரசுகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பும் என்று தெரிந்தும் தைரியமாக ஈழத்தில் நடந்த கொடுமையை பதிவு செய்த இயக்குனர் சந்தோஷ் சிவனை பாராட்டாமல் இருக்க முடியாது.
ஈழத்தில் போர் நடந்து கொண்டிருக்கும்போது ஆதரவு இல்லாமல் தவிப்போர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் சுனாமி அக்கா என்ற சரிதாவிடம் புதிதாக சேருகிறார் மனநிலை சரியில்லாத கரண். கரணை அந்த காப்பகத்தில் தங்கியிருக்கும் சுகந்தாவும், மற்ற நண்பர்களும் பாசத்துடன் கவனித்து கொள்கின்றனர்.
இந்நிலையில் இலங்கை ராணுவம் போட்டி குண்டு ஒன்றினால் சரிதாவின் காப்பகத்தில் உள்ள சிலர் இறந்துவிடுகின்றனர். உயிர் பிழைத்தவர்களில் ஒருசிலர் இலங்கை ராணுவத்துக்கு எதிராக சண்டை போட சென்றுவிடுகின்றனர். எனவே அதிர்ச்சி அடைந்த சரிதா, கரணை கவனித்து கொள்ள ஆள் இல்லை என்பதால் சுகந்தாவை கரணுக்கு திருமணம் செய்துவைத்துவிட்டு, அவரும் குண்டடிபட்டு இறந்துவிடுகிறார்.
சரிதாவின் உதவியாளர் கருணாஸ் உதவியுடன் கரணும், சுகந்தாவும் இலங்கையில் இருந்து தப்பித்தார்களா? அவர்களின் காதல் வாழ்க்கை என்ன ஆனது என்பதே இரண்டாவது பாதியின் கதை.
ஈழ மக்களின் கலாச்சாரத்தை கண்முன் வெகுஇயல்பாக நிறுத்துகிறார் சந்தோஷ் சிவன். கதைக்கு தேவையான வெகு சில கதாபாத்திரங்கள், இயல்பான நடிப்பு, தெளிவான ஒளிப்பதிவு, ரம்மியமான இசை என அனைத்துமே அருமை.
நான்கு வரிகள் மட்டும் விமர்சனம் எழுதிவிட்டு மொத்தத்தில் நல்ல படம் என்று சொல்லக்கூடிய சாதாரண படம் இல்லை இனம். கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் பார்க்க வெண்டிய படம்.