பெங்களூரு ஐ.ஐ.எம்.,ல் ஆய்வு செய்ய இடமும் கிடைத்து, அதற்கு ஆண்டுக்கு 2.8 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையும் கிடைத்தால்? மேலாண்மை சார்ந்த பட்டம் பெற்று, அத்துறையில் ஆய்வு செய்ய விரும்புபவர்களுக்கு இந்தச் செய்தி இனிப்பானதாகவே இருக்கும்.
பெங்களூரு ஐ.ஐ.எம்., மேலாண்மை தொடர்பான பல்வேறு துறைகளிலும் ஆய்வு செய்ய அழைப்பு விடுத்துள்ளது. கார்ப்பரேட் செயல்திட்டம் மற்றும் கொள்கைகள், பொருளியல் மற்றும் சமூக அறிவியல், சந்தையியல், அமைப்பியல் நடத்தைகள் மற்றும் மனிதவள மேம்பாடு, நிதிக்கட்டுப்பாடு, உற்பத்தி மற்றும் செயலாக்க மேலாண்மை, அளவீட்டு வழிமுறை மற்றும் தகவல் முறைகள், பொதுக்கொள்கைகள் உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு செய்யலாம்.
நான்கு ஆண்டு கால இளநிலைப்பட்டம் அல்லது சி.ஏ.,- ஐ.சி.டபிள்யூ.ஏ.,-சி.எஸ்., பாடங்களில் முதுநிலைப்பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு மணி நேர எழுத்துத் தேர்வும், தொடர்ந்து நேர்முகத்தேர்வும் நடத்தப்படும். இதனடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு www.iimb.ernet.in இணையதளத்தை காணவும்.