கே.என்.நேருவுக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை
வரும் தேர்தலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டு கட்சியினர்களும் வாக்காளர்களுக்கு தாராளமாக பணம் கொடுக்க முடிவு செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தியால் தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பாக செயல்பட்டு பண விநியோகத்தை தடுத்து வருகிறது. இந்த வகையில் அரசியல்வாதிகள் பணம் பதுக்கி வைத்திருப்பதாக சந்தேகப்படும் இடங்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வருமான வரித்துறையினர் திடீரென அதிரடியாக நேற்று மாலை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் குறித்து தேர்தல் அலுவலர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை பட்டினப்பாக்கம் அருகே திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு குடும்பத்தினருக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வருமான வரித்துறை துணை இயக்குநர் மாணிக்கம் தலைமையில், வருமான வரித்துறை அதிகாரிகளும், தேர்தல் பறக்கும் படையினரும் நேற்று மாலை 3 மணி அளவில் சோதனையில் ஈடுபட்டனர். அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வணிகவளாகங்களும் தனியார் நிறுவனங்களும் அதிகளவில் உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது