கடந்த சில வருடங்களாக செட்டிநாடு குழுமத்தின் சொத்துக்களுக்கு முறையான வரி செலுத்தவில்லை என்ற புகார்கள் வந்ததை அடுத்து இன்று ஒரே நாளில் செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களாக செட்டிநாடு குழும சொத்துக்கள் குறித்து தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமிக்கும், அவரது முன்னாள் வளர்ப்பு மகன் ஐயப்பனுக்கும் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோதனை தமிழகத்தில் உள்ள 35 இடங்களிலும், ஆந்திரா மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் தலா 2 இடங்களிலும் ஒரே நடந்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள தொழிலதிபர் எம்.ஏ.எம் ராமசாமி, ‘ஐயப்பன் எனக்கு பிள்ளையே இல்லை. எனக்குப் பிறகு ஒரு ரூபாய்கூட அவருக்குப் போகக்கூடாது. ஒரு மகனாக எனது மனைவிக்கு திதி கொடுக்கக்கூட நினைக்காத அவர், எனக்கு எவ்வித ஈமச்சடங்குகளையும் செய்யக் கூடாது. எனக்குப் பிறகு சொத்துகளை நிர்வகிக்க 2 அறக்கட்டளைகளை உருவாக்கி இருக்கிறேன். அதை ஏ.சி.முத்தையா நிர்வகிப்பார். அறக்கட்டளை சொத்துகள் எந்தெந்த தர்ம காரியங்களுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற விவரம் உயிலில் உள்ளது.