ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவைத் தவிர நாம் என்னென்ன சாப்பிடுகிறோம்? இந்தக் கேள்விக்கு டீ, காபி, பிஸ்கட், வடை, பஜ்ஜி, முறுக்கு, பானி பூரி, குளிர்பானம்… என நீள்கிறது பதில் பட்டியல். ஒருவேளை அல்லது இரண்டு வேளை உணவை மட்டுமே உட்கொண்டு, காட்டிலும் மேட்டிலும் வேலை செய்தனர் நம் முன்னோர். இன்றோ, கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து வேலை பார்த்தாலுமேகூட, ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை நொறுக்குத் தீனி இல்லாமல் இருக்க முடிவது இல்லை. இதனால், உடல்பருமன், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு என ஏராளமான பிரச்னைகள். காலை 9 மணிக்கு வயிறு நிரம்ப டிஃபன் சாப்பிடுபவருக்கு, 11 மணி அளவில் வயிறு சிறிது காலியாகிறது. அவர் ஏதேனும் சாப்பிட வேண்டும் என நினைத்து, ஆரோக்கியமான ஆப்பிள் ஜூஸ் அருந்தினாலுமே அதையும் நொறுக்குத்தீனி என்றுதான் கருத முடியும். ஓர் உணவு வேளைக்கும் இன்னொரு உணவு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில், உடலுக்குக் கட்டாயம் உணவு தேவைப்படும்போது சத்தான ஸ்நாக்ஸ் எதையாவது சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், வலுக்கட்டாயமாக பிஸ்கட்டையோ, பஜ்ஜியையோ சாப்பிடுவது தவறு. நொறுக்குத்தீனி என்றால் வெறும் முறுக்கு, பஜ்ஜி என்று சுருக்கிவிட முடியாது. நொறுக்குத்தீனிகளில் கலோரிகள் அதிகம். கொழுப்புச் சத்து, மாவுச்சத்து இரண்டும் அதிக அளவில் இருக்கும். தேவை இல்லாத நேரத்தில் சாப்பிடும் எந்த ஓர் உணவையுமே நொறுக்குத்தீனியாகத்தான் கருத முடியும்.
வீட்டில் தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனிகள்
நாம் சமைக்கும் ஒவ்வோர் உணவுக்கும் குறிப்பிட்ட ஆயுட்காலம்தான் உண்டு. வீட்டில் தயாரித்து ஒரு வாரமோ, ஒரு மாதமோ பத்திரப்படுத்திச் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் இந்த வகை நொறுக்குத் தீனிகளே. வீட்டில் செய்த அதிரசம், லட்டு, ஜாங்கிரி, முறுக்கு, காராசேவு முதலானவை இந்த வகையைச் சேர்ந்தவை. இவற்றைத் தேவையற்ற நேரங்களில் சாப்பிடும்போது, கார்போஹைட்ரேட் அதிகரிக்கும். இவை கொழுப்பாக மாற்றப்பட்டு சேகரிக்கப்படும். இதனால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகள்
இவற்றில், செயற்கை நிறமூட்டிகளும் சுவையூட்டிகளும் சேர்க்கப்பட்டிக்கும். இதனால்தான் ஒரு முறை வாங்கிச் சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் வாங்கிச் சாப்பிடத் தூண்டுகின்றன. இவை நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்க, பதப்படுத்திகளைச் சேர்க்கின்றனர். மேலும், உடலுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் பாலிதீன் போன்றவற்றால் பாதுகாக்கப்படுகிறது.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளின் ஆபத்துகள் குறித்து, பல ஆய்வுகள் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. பாக்கெட் உணவுகளில் வேதியல் பொருட்கள், உப்புகள், பதப்படுத்திகள், நிறமூட்டிகள் போன்றவை கலக்கப்பட்டிருப்பதால், இவற்றை உண்ணும்போது பல வகையான ஹார்மோன் பிரச்னைகள் வருகின்றன. அதில் மிக முக்கியமானது சர்க்கரை நோய். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் பலருக்கும் ஹார்மோன் சமச்சீரின்மைப் பிரச்னை சமீபகாலங்களில் அதிகரிக்க, இந்த உணவுகள் முக்கியக் காரணி.
ஜங் ஃபுட்
பீட்சாவும் பர்கரும் மட்டும் அல்ல, சமோசாவும் பஜ்ஜிகளும் ஜங்க் ஃபுட் தான். பலர் ‘பீட்சா சாப்பிடுவது தவறு’ எனச் சொல்லிக்கொண்டே, டீக்கடையில் சமோசா, பஜ்ஜிகளை வெளுத்துக் கட்டுவார்கள். பேக்கரிகளில் விற்கப்படும் உணவுகள், ஐஸ்க்ரீம், கேக் என கிட்டத்தட்ட அனைத்து நொறுக்குத்தீனிகளும் ‘ஜங் ஃபுட்’ என்ற வரையறைக்குள் அடங்கிவிடுபவை. அதிக சர்க்கரை, அதிக உப்பு, அதிகக் கொழுப்பு உள்ள உணவுகள் அனைத்துமே ஜங்க் ஃபுட்தான். இதனால்உடல்பருமன் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. கூடவே, சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை பல நோய்களும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
எண்ணெய் பாதிப்பு
எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் அனைத்துமே உடலுக்குக் கேடுவிளைவிக்கக்கூடியவைதான். அப்பளம், உளுந்தவடையில் ஆரம்பித்து சிக்கன் ரைஸ், நூடுல்ஸ், காலிஃபிளவர் வறுவல், காளான் ஃபிரை என எல்லாமே பாதிப்பைத் தருபவை. எண்ணெயில் பொரித்த உணவுகள், கெட்ட கொழுப்பை அதிகரிக்கின்றன. ஒரு முறை சூடுபடுத்தப்பட்ட, சமைக்கப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்துவதால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. எண்ணெயில் பொரித்த சிக்கன், ஃப்ரெஞ்ச் ஃபிரைஸ் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடுவதன் காரணமாக, மேலை நாடுகளில் உணவுக்குழாய் பகுதியில் புற்றுநோய் ஏற்படுவது சர்வசாதாரணம். இந்தியாவிலும் அது போன்ற நிலைமை ஏற்படுவதைத் தடுக்க எண்ணெயில் பொரித்த நொறுக்குதீனிகள் அனைத்தையும் தவிர்ப்பதுதான் நல்லது.
நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா?
நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் எல்லோருக்கும் சர்க்கரை நோய் வருவது இல்லை. சர்க்கரை நோய் வருவதற்கு உடல் உழைப்பு, உணவுப் பழக்கம் எனப் பல காரணிகள் உள்ளன. அதிக அளவு மாவுச்சத்துள்ள நொறுக்குத்தீனிகளை உண்ணும்போது, இன்சுலின் தேவை அதிகமாகிவிடுகிறது. கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடும்போது, உடல்பருமன் ஏற்படுகிறது. இந்தக் காரணங்களால் சிலருக்குச் சர்க்கரை நோய் வரக்கூடும். உடற்பயிற்சி இல்லாமல் நொறுக்குத்தீனி சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாகிறது.
பாரம்பர்ய உணவுமுறை பெஸ்ட்
நொறுக்குத்தீனிகளைக் கண்டிப்பாகச் சாப்பிடவே கூடாது என முடிவு செய்துவிட வேண்டாம். நம் முன்னோர்கள் ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ற மாதிரி உணவு வகைகளைத் தயார்செய்து சாப்பிட்டார்கள். மழைக்காலத்தில் உடலுக்கு வெப்பம் அதிகம் தேவைப்படும் என்பதால், அதிக கலோரி தேவைப்படும். மேலும், அந்த நேரத்தில், வெளியே போக முடியாது என்பதால், பலகாரங்கள் முதலான தின்பண்டங்களைச் செய்துவைத்துச் சாப்பிட்டனர். பனிக்காலம் முடியும் தருவாயில் பொங்கல் போன்ற அரிசி உணவுகளைச் சாப்பிடுவார்கள். வெயில் காலத்தில் நீர் மோர், பானகம் ஆகியவற்றைப் பருகினார்கள். ஆனால், இன்று எல்லா உணவுப் பொருட்களும் எல்லா நாட்களிலும் கிடைக்கின்றன. வெயில் காலத்தில் ஜாங்கிரியும், மழைக்காலத்தில் தர்பூசணியும் சாப்பிடும் சூழ்நிலைக்கு வந்துவிட்டோம்.
ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்றார்போல உணவு சாப்பிடும் முறையைத் தவிர்த்தது, வழக்கத்தை மாற்றியதுதான் தற்போது பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். எனவே, இனிப்போ, காரமோ எந்த வகை நொறுக்குத்தீனியாக இருந்தாலும் வீட்டில் செய்து எப்போதாவது சாப்பிடுவதில் தவறு இல்லை. தினமும் டீ குடிக்கும்போது பஜ்ஜி சாப்பிட்டே ஆக வேண்டும், தியேட்டருக்குப் போனால் பாப்கார்ன் சாப்பிட்டே ஆக வேண்டும் என நினைத்து, நொறுக்குத்தீனி எதையாவது கொறிப்பதுதான் தவறு.
– நன்றி விகடன்