நியூட்ரிஷன் பணியாளர் தேவை அதிகரிப்பு

bsnl

நமது நாட்டின் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு, சரியான உணவு பழக்க செயல்பாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உலகிலேயே அதிக சர்க்கரை நோயாளிகள்  மற்றும் இதர வகை நோயாளிகளை கொண்டுள்ள நாடு இந்தியாதான். தற்போது உள்ள சூழ்நிலையில் இந்நாட்டுக்கு முக்கியமாக தேவைப்படுவது  நியூட்ரிஷன்களின் பணிதான். இன்றைய காலகட்டத்தில் நியூட்ரிஷன் பணியிடங்களுக்கான தேவைகள் அதிகரித்துள்ளது. இன்றைய மாணவர்கள் சமுதாயத்தில்  தங்களது சேவையை தொடரவும், அதே சமயம் அதிக வருமானம் பெறவும் இந்த நியூட்ரிஷன் துறை ஒரு சிறந்த வழிகாட்டியாகும்.

நியூட்ரிஷன் துறையின் வளர்ச்சி:

கடந்த 1930 ஆண்டுகளிலேயே இந்தியாவில் நியூட்ரிஷன் தொடர்பான படிப்புகள் தொடங்கி விட்டன. ஆரம்ப காலங்களில் சமைத்தல், டெக்ஸ்டைல்  மேலாண்மை தொடர்பான படிப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. 1960ம் ஆண்டு முதல் தான் நியூட்ரிஷன் படிப்புகளின் முக்கியத்துவத்தை மாணவர்கள்  உணரத் தொடங்கினர். இதன் பின்னர் தான் இப்படிப்புகள் பிரபலம் அடையத் தொடங்கியது. தற்போது இந்த துறை பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.  முன்னர் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு தான் முக்கியத்துவம் தரப்பட்டது. ஆனால் ஆரோக்கியம் தொடர்பான பார்வை இன்றைய நிலையில் பெரிய அளவில்  மாறியுள்ளது. இந்தியாவில் ஊட்டச்சத்து பிரச்னைகள் பல நிலைகளில் இருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு, அளவுக்கு மீறிய உணவினால் வரும் பிரச்னைகளால்  தற்போது அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

நியூட்ரிஷன் துறையினர் மேற்கொள்ளும் பணிகள்:

நியூட்ரிஷன் துறை தொடர்பான படிப்புகளை முடித்தவர்கள், உணவு அறிவியல், சமூக மேம்பாடு, ஆராய்ச்சி திட்டங்கள், அதிகம் விற்பனையாகும் பொருட்களை  தயாரிக்கும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் வாய்ப்பை பெறுகின்றனர். இவர்களின் பணி ஆராய்ச்சி தொடர்பானது.  நியூட்ரிஷன்கள் களப்பணி, ஆய்வகப்பணி, அலுவலகப் பணிகளை மேற்கொள்வார்கள்.

நியூட்ரிஷன் துறையில் செல்ல வழிகள்:

மாணவர்கள் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்த பின்னர் நியூட்ரிஷன் படிப்புகளை மேற்கொள்ளலாம். இப்படிப்புக்கான பெயர்கள் கல்லூரிக்கு கல்லூரி  மாறுபடுகிறது. பி.எஸ்.சி ஹோம் சைன்ஸ், படிப்பில் 2ம் மற்றும் 3ம் வருடத்தில் உணவு மற்றும் நியூட்ரிஷன் தொடர்பான ஸ்பெஷலைசேஷன் படிப்புகளை  மேற்கொள்ளலாம். பி.எஸ்.சி. நியூட்ரிஷன் அண்டு டயடீஷியன் படிப்பை மூன்று ஆண்டுகள் மேற்கொள்ளலாம். ஹானர்ஸ் படிப்பை பொருத்தவரை அறிவியல்  படிப்புகளை படித்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இத்துறையில் உடலியல், உணவு மற்றும் நியூட்ரிஷன், மைக்ரோபயாலஜி, ஆர்கானிக் கெமிஸ்ட்ரி,  கம்யூனிட்டி நியூட்ரிஷன் போன்ற அம்சங்கள் பாடத்திட்டத்தில் உள்ளடக்கியுள்ளது. இப்படிப்புகள் வழங்கும் கல்லூரிகள் சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி,  போன்ற பல இடங்களில் உள்ளது.

இத்துறையில் பணி வாய்ப்புகள்:

நியூட்ரிஷன் படிப்பை முடித்தவர்களுக்கு பல்வேறான மருத்துவமனைகளில் பணிவாய்ப்புகள் அதிகம் வழங்கப்படுகிறது. கெலாக்ஸ், பிரிட்டானியா போன்ற  உணவுத் தொழிற்சாலைகள், சமூக நலம் மற்றும் மேம்பாட்டு பணிகளில் நியூட்ரிஷன் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது. மேலும் பொது சுகாதாரத் துறைகளிலும் வாய்ப்புகள் அதிகம் வழங்கப்படுகிறது. பொது சுகாதாரத்துறையில் நியூட்ரிஷன் பணிக்கு ஆட்களை யூ.பி.எஸ்.சி.  நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இத்தேர்வின் மூலம் பணி வாய்ப்பு பெறும் மாணவர்கள் கிளாஸ் 1 அதிகாரி என்ற நிலையில்  பணியமர்த்தப்படுவார்கள். ஆலோசகர்கள், தொழில் நுட்ப ஆலோசகர்கள், உதவி ஆலோசகர்கள் போன்ற நிலைகளில் நியூட்ரிஷன்கள் பணியாற்ற வாய்ப்புகள்  அளிக்கப்படுகிறது. மேலும் விளையாட்டு துறை நியூட்ரிஷன்களுக்கான மதிப்பும், தேவையும் தற்போது அதிகரித்துள்ளது.

நியூட்ரிஷன் துறையில் வருமானம்:

இத்துறையில் புதிதாக படித்து வெளிவருபவர் மாதம் ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். அனுபவம் பெற்ற பின்னர் 30 ஆயிரம் மற்றும்  அதற்கு மேலும் ஊதியம் பெற முடியும். அரசு மருத்துவமனைகளில் 6வது சம்பள கமிஷன் அடிப்படையில் ஊதியம் 25 ஆயிரம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.

Leave a Reply