இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றினார். 20 வருடங்களுக்கு பின்னர் செல்லும் இந்திய பிரதமர், இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் 4வது வெளிநாட்டு பிரதமர் என்ற அளவில் நேற்றைய மோடியின் உரை முக்கியத்துவம் பெற்றது.
இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று மோடி பேசிய உரையில் இருந்து சில பகுதிகள்:
கலாச்சாரம், நட்புறவு மிக்க இலங்கைக்கு பயணம் மேற்கொண்டதில் மகிழ்ச்சி. தொழில் முனைவோரும், திறன்மிக்க மக்களும் மிகுந்த நாடு இலங்கை. இந்த பகுதியில் நாம் நம்மை எப்படி அடையாளப்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே வளர்ச்சி இருக்கும்.
சுதந்திரமான இறையாண்மை நாடுகளாக இந்தியா- இலங்கை சேர்ந்து நிற்கின்றன. எதிர்கால இந்தியாவுக்கான எனது கனவு அண்டை நாடுகளுக்குமானதுதான்.
இருநாடுகளுக்கிடையேயான போக்குவரத்தை மேம்படுத்த இராமாயண ரயில் என்ற போக்குவரத்து திட்டம் விரைவில் நிறைவேறும். இந்த திட்டம் அனைத்து மத புனித தலங்களையும் இணைக்கும் திட்டமாக இருக்கும்.
எதிர்கால பாதையை தேர்ந்தெடுக்க வேண்டியது இலங்கையின் கடமை. நல்ல நட்பு நாடாக இலங்கையை எப்போதும் ஆதரிப்போம், இலங்கையின் ஒருமைப்பாடு இந்தியாவுக்கு மிகவும் முக்கியம்
பொருளாதாரத்தில் முன்னேறும் இந்தியாவுக்கு அண்டைநாடுகள் முக்கியத்துவம் தர வேண்டும். இருநாடுகளை போக்குவரத்தின் மூலம் இணைப்பதனால் வளர்ச்சி காணலாம்.
இந்தியாவின் வலுவான பொருளாதார நட்பு நாடாக இலங்கைக்கு தகுதியுள்ளது. இருதரப்பு உறவில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
இருநாடுகளும் ஒன்றிலிருந்து ஒன்று தனித்து இருக்க முடியாது. கடல்வழி பாதுகாப்பு விஷயத்தில் இருநாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். மேலும் இலங்கை அரசு வெற்றிகரமாக தீவிரவாதத்தை முறியடித்துள்ளது
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.